அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்; ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் வேண்டுகோள்
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை சிறப்பாக நடத்தி முடிக்கும் வகையில் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமென மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி பேசினார்.
குலசேகரன்பட்டினம்:
ஆலோசனை கூட்டம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் வருகிற 24-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு சிதம்பரேஸ்வரர் கடற்கரையில் வைத்து நடக்கிறது. இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் மூலம் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி தலைமையில் நேற்று நடந்தது.
அப்போது அவர் பேசியதாவது:-
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா காலங்களில் வடகிழக்கு பருவ மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் தகுந்த முன்னேற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரும் என்பதால் வாகனங்கள் நிறுத்துமிடங்கள் சீரமைக்கப்பட்டு வாகனங்கள் நிறுத்தும் வகையில் தயார்நிலை செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அடிப்படை வசதி
மேலும் திருவிழா காலங்களில் அனைத்து நாட்களும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பிட வசதி, குப்பை கழிவுகளை அகற்றுதல் போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்டவைகளை சிறப்பான முறையில் ஏற்படுத்திட வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தொடர்புடைய பொருட்கள் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யபட வேண்டும்.
தற்காலிக பஸ்நிலையம் மற்றும் தற்காலிக வாகன நிறுத்தங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகளை சரியாக செய்யப்பட்டுள்ளதா? என ஆய்வு மேற்கொண்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களை தேர்வு செய்து கூடுதலாக கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
தேவையான சாலைகளில் ஒருவழிப்பாதையில் வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கண்காணிக்க வேண்டும்
திருவிழாவிற்கு வரும் வாகனங்களை தணிக்கை செய்ய தற்காலிக சோதனைச்சாவடிகள் ஏற்படுத்த வேண்டும். அவசர கால நேரங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தங்கு தடையின்றி செல்லும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவிழாவின் இறுதிநாளில் திரும்ப வரும் வாகனங்கள் நெரிசலின்றி வெளியே செல்ல தகுந்த முன்னேற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்.
கூடுதல் பஸ்கள் நின்று செல்லும் இடங்களை வட்டார போக்குவரத்து அலுவலர் கண்காணிக்க வேண்டும்.
தெருவிளக்குகள் அனைத்தும் நன்கு எரிய வேண்டும். தேவையான இடங்களில் கூடுதலாக விளக்குகள் அமைக்கப்பட வேண்டும். கடற்கரை சாலையில் விளக்குகள் கூடுதலாக அமைக்க வேண்டும்.
விழாவிற்கு வரும் பக்தர்களின் மருத்துவ வசதிக்காக மருத்துவர், சுகாதார ஆய்வாளர், மருத்துவப்பணியாளர் கொண்ட சிறப்பு மருத்துவக்குழு அமைக்கப்பெற்று சுழற்சி முறையில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் பணியாற்றிட வேண்டும்.
தசரா திருவிழாவை சிறப்பாக நடத்திட அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்துகொண்டவர்கள்
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருசந்திரன், திருச்செந்தூர் தாசில்தார் வாமனன் மற்றும் காவல்துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, போக்குவரத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.