குறைதீர்க்கும் கூட்டத்தில் அனைத்துதுறை அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும்


குறைதீர்க்கும் கூட்டத்தில் அனைத்துதுறை அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும்
x

குறைதீர்க்கும் கூட்டத்தில் அனைத்துதுறை அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

தர்மபுரி

குறைதீர்க்கும் கூட்டத்தில் அனைத்துதுறை அதிகாரிகளும் பங்கேற்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.

மண் எடுக்க அனுமதி

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா தலைமை தாங்கினார். அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசியதாவது:-

நான்கு வழி சாலை அமைக்க பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில் மண் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. அதே நேரத்தில் ஏழை எளிய விவசாயிகள் விவசாயத்திற்காக தங்களுக்கு தேவைப்படும் மண்ணை எடுக்க உரிய அனுமதி அளிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. விவசாய பணிகளுக்கு மண் எடுக்க வழங்கப்படும் அனுமதியை எளிமைப்படுத்த வேண்டும்.

கடன் தள்ளுபடி

சின்ன வெங்காய பயிருக்கு செய்யப்பட்ட பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. பயிர் காப்பீட்டு தொகையை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தர்மபுரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து கால்நடை கிளை மருத்துவமனைகள் விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் நலன்கருதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு பணியாளர் இருக்கும் வகையிலாவது செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 2016- ம் ஆண்டு சிறு குறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கூட்டுறவுக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. பிற கடன்கள் மத்தியகால கடன்களாக மாற்றப்பட்டன. இந்த மத்திய கால விவசாயகடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மரவள்ளி சாகுபடி விவசாயிகள் மாவு பூச்சி தாக்குதலால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முத்தரப்பு கூட்டத்தை விரைவாக நடத்த வேண்டும். விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் பேசினார்கள்.

பரபரப்பு

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கால்நடை மருந்தகங்களில் சனி, ஞாயிறு உள்ளிட்ட நாட்களிலும் பணியாளர்கள் மூலம் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்துள்ள பல்வேறு கோரிக்கைகள், கருத்துக்கள் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மாதத்தில் ஒரு நாள் நடக்கும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். கூட்டத்தின் இடையில் அதிகாரிகள் கூட்டத்தை விட்டு வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி கூட்ட அரங்கில் இருந்து சில விவசாயிகள் வெளியேறியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கூட்டம் தொடர்ந்து நடந்தது.


Next Story