4 பேர் திருச்சி சிறப்பு முகாமில் தனித்தனி அறையில் தங்க வைப்பு


4 பேர் திருச்சி சிறப்பு முகாமில் தனித்தனி அறையில் தங்க வைப்பு
x

4 பேர் திருச்சி சிறப்பு முகாமில் தனித்தனி அறையில் தங்க வைக்கப்பட்டனர்.

திருச்சி

சிறப்பு முகாம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சிறையில் இருந்து விடுதலையான இலங்கையை சேர்ந்த முருகன், சாந்தன், ராபர்ட்பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் நேற்று முன்தினம் நள்ளிரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.

அப்போது மத்திய சிறை வளாகத்தின் முன்பு திரண்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் கோஷம் எழுப்பி, 4 பேரையும் வரவேற்றனர். மேலும் அவர்கள் வாணவெடி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் 4 பேரும் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டனர். இதையொட்டி சிறப்பு முகாம் பகுதியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதிய கட்டில், மெத்தை...

இதற்கிடையே அவர்கள் 4 பேரும் இங்கு அழைத்து வரப்பட்டு, தங்க வைக்கப்பட உள்ள தகவல் உறுதியான உடனேயே, அவர்கள் தங்கும் அறைகள் சுத்தம் செய்யப்பட்டு, புதிதாக கட்டில், மெத்தை, தலையணை, மின்விசிறிகள் போன்றவற்றை வருவாய்த்துறையினர் வாங்கி வைத்தனர்.அவர்கள் தங்கியுள்ள அறைகளின் ஜன்னல்களுக்கு கதவுகள் இல்லை என்பதால் அட்டைகள் கொண்டு மறைக்கப்பட்டன. அவர்கள், 4 பேரும் சிறப்பு முகாமுக்கு வந்ததும் முறைப்படி அவர்களின் வருகையை வருவாய்த்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர்.

ஏற்கனவே இலங்கை உள்பட பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் குற்ற வழக்குகளில் சிக்கி, இந்த சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களை விடுவிக்க கோரி தொடர்ந்து 86-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறாா்கள்.

இந்தநிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட 4 பேரும் இங்கு தங்க வைக்கப்படுவதால், அவர்களால் இவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படக்கூடாது என்று பாதுகாப்பு கருதி 4 பேரும் தனித்தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மற்றவர்கள் சந்திக்கவும் அனுமதிக்கவில்லை. அப்போது, வழக்கில் இருந்து விடுதலை ஆன பின்னரும் இங்கேயும் அடைக்கிறீங்களே என்று அந்த 4 பேரும் அதிகாரிகளிடம் வேதனையுடன் தெரிவித்தனர்.

திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 4 பேருக்கும் முதல்நாளான நேற்று காலை வருவாய்த்துறையினரே இட்லி, தோசை, பொங்கல் வாங்கி கொடுத்தனர். மதியம் சாப்பாடும், இரவில் டிபனும் அவர்களுக்கு வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், அவர்கள் விரும்பும் உணவு என்ன உணவாக இருந்தாலும் அதற்கான பணத்தை அவர்கள் கொடுத்தால், அதையும் வருவாய்த் துறையினர் வாங்கி கொடுப்பார்கள்.

சிறப்பு முகாமில் மற்றவர்களுக்கு வழங்கப்படும் தினசரி உணவு படி ரூ.175, இவர்கள் 4 பேருக்கும் வழங்கப்பட்டது. இந்தநிலையில் சாந்தன் இலங்கைக்கு செல்ல விரும்புவதாக ஏற்கனவே தெரிவித்து இருந்தார். முருகன் எங்கு தங்குவார் என்று இதுவரை கூறவில்லை. மற்ற 2 பேரும் தாய்நாட்டுக்கு சென்றால் தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் இந்தியாவிலேயே வாழ விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

அவர்களை தாய்நாட்டுக்கு அனுப்புவதும், இந்தியாவில் தங்க அனுமதிப்பதும் உள்துறைதான் முடிவு செய்யும். அதுவரை இவர்கள் இங்குதான் தங்க வைக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.


Next Story