சாராயத்தை ஒழிக்க வேண்டும்; கலெக்டரிடம் பெண்கள் முறையீடு


சாராயத்தை ஒழிக்க வேண்டும்; கலெக்டரிடம் பெண்கள் முறையீடு
x

சாராயத்தை ஒழிக்க வேண்டும் என பெண்கள் கலெக்டரிடம் முறையிட்டனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள திம்மூர் கிராமத்தில், அரசு பஸ் புதிய வழித்தடத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. அவ்விழாவில் கலந்து கொள்வதற்காக பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் அங்கு சென்றார். அப்போது திம்மூர் கிராம பெண்கள், ஒன்று திரண்டு மாவட்ட கலெக்டர் கற்பகத்திடம் திம்மூர் கிராமத்தில், கள்ளச்சாராயம் விற்கப்படுவதாகவும், அதோடு மட்டுமல்லாமல் டாஸ்மாக்கில் விற்கப்படும் மது பாட்டில்களை வாங்கியும் அதனை கள்ளத்தனமாக கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் முறையிட்டனர். மேலும் பெண்களுக்கு ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் மற்றும் குளியல் அறைகள் கட்டித் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதனை பொறுமையுடன் கேட்டுக்கொண்ட கலெக்டர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். முன்னதாக மாவட்ட கலெக்டர் திம்மூர் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளி வளாகத்தை பார்வையிட்டார். பள்ளி வளாகத்தை சுற்றி புல், பூண்டுகள், கற்கள் கிடப்பதை பார்த்து உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டார்.பள்ளி வளாகம் தூய்மையாக இல்லாவிட்டால், அடுத்த முறை வரும் போது தலைமை ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை பள்ளி வளாகத்தை முற்றிலும் சுத்தம் செய்து கொடுக்கவும் உத்தரவிட்டார்.


Next Story