மது ஒழிப்பு மாநாடு ஓர் அரசியல் நாடகம்: கருணாஸ் பேட்டி
நடிகர் விஜய் தனித்து கூட தேர்தலில் நிற்க முடியாது என்று கருணாஸ் கூறினார்.
மதுரை,
முக்குலத்தோர் புலிப்படை நிறுவனத்தலைவரும், நடிகருமான கருணாஸ் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் உண்மையை பேசினார். அவரை கட்டாயப்படுத்தி மன்னிப்பு கேட்கவைத்துள்ளனர். இது சர்வாதிகாரபோக்கு. இதை ஒட்டு மொத்த தமிழக மக்கள் மற்றும் தமிழக வியாபாரிகளின் அவமானமாக கருதுகிறேன். பிரதமர் டுவிட்டர், பேஸ்புக்கில் கருத்து சொல்கிறார். அதற்கு பதில் அளிக்கும் வகையில் நாங்களும் சமூகவலைத்தளங்கள் மூலம் பதில் அளித்து வருகிறோம்.
அரசியலுக்கு வருவது எளிதல்ல. நடிகர் விஜய்யின் கொள்கை, சித்தாத்தம் குறித்து பேசினால், அதன்பின்னர் அவருடன் கூட்டணி வைப்பது பற்றி யோசிக்கலாம். நடிகர் விஜய் தனித்து கூட தேர்தலில் நிற்க முடியாது. நான் தனித்து நின்றால், நானும் எனது மனைவியை தவிர யாரும் ஓட்டு போடமாட்டார்கள். இது கள யதார்த்தம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு எனக்கு அழைப்பு இல்லை. சாதி, மத அமைப்புகளுக்கு அழைப்பு இல்லை என்கிறார் திருமாவளவன். இவ்வளவு நாள் அவர் என்ன செய்தார்?. பாமக சாதிக்கட்சி என்றால், விடுதலை சிறுத்தைகள் என்ன கட்சி?. மது ஒழிப்பு மாநாடு என்பது ஓர் அரசியல் நாடகமாக இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.