இருளில் மூழ்கி கிடக்கும் அக்கரைப்பேட்டை மேம்பாலம்


இருளில் மூழ்கி கிடக்கும் அக்கரைப்பேட்டை மேம்பாலம்
x

இருளில் மூழ்கி கிடக்கும் அக்கரைப்பேட்டை மேம்பாலம்

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம்:

நாகை அக்கரைப்பேட்டை மேம்பாலத்தில் உள்ள மின்விளக்குகள் எரியாததால் பாலம் இருளில் மூழ்கி கிடக்கிறது. எனவே மின்விளக்குகளை எரிய வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேம்பாலம்

நாகையிலிருந்து அக்கரைப்பேட்டையை இணைக்கும் வகையில் கடுவையாற்றில் மேம்பாலம் உள்ளது. வேளாங்கண்ணிக்கு நாகை கிழக்கு கடற்கரை வழியாகவும், அக்கரைப்பேட்டை மேம்பாலத்தில் இருந்து தெற்கு பொய்கைநல்லூர் வழியாகவும் செல்லலாம். சென்னை, விழுப்புரம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பாத யாத்திரையாக வேளாங்கண்ணிக்கு பெரும்பாலானோர் இந்த அக்கரைப்பேட்டை மேம்பாலம் வழியாக தான் செல்வார்கள். மேலும் வடக்கு பொய்கைநல்லூரில் புகழ்பெற்ற கோரக்க சித்தர் பீடமும் உள்ளது.

இந்த இடத்திற்கும் நாள் தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இது தவிர இங்கு மீன்பிடி துறைமுகம் இருப்பதால் நள்ளிரவு 2 மணியில் இருந்தே ஏராளமான வியாபாரிகள் நாகை பகுதிக்கு வந்து செல்கின்றனர். அவ்வாறு நாகையிலிருந்து அக்கரைப்பேட்டைக்கு செல்லும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலம் தான் கோரக்க சித்தர் கோவில், வேளாங்கண்ணி பேராலயம், அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு செல்ல ஒரே வழிதடமாக உள்ளது.

இருளில் மூழ்கி கிடக்கும் பாலம்

அக்கரைப்பேட்டை மேம்பாலத்தில் பல மாதங்களாக தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. பாலத்தில் அமைக்கப்பட்டிருந்த பெரும்பாலான மின்கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்களில் ஓரிரு மின் விளக்குகள் மட்டுமே எறிவதால், பாலம் இருளில் மூழ்கி காட்சியளிக்கிறது. எனவே பாலத்தில் செல்லும் கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை, கல்லார், வடக்கு, தெற்கு பொய்கைநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் மீன்பிடி துறைமுகம் அருகில் இருப்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வியாபாரிகளும், லோடு ஆட்டோ, வேன்களும், அக்கரைப்பேட்டை மேம்பாலத்தை கடந்து செல்லும் போது சிரமப்படுகின்றனர்.

மின்விளக்குகள் ஒளிருமா?

குறிப்பாக நடந்து செல்பவர்களும், சைக்கிளில் செல்பவர்களும் இருளில் சாலை தெரியாமல் பாலத்திலிருந்து கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே மேம்பாலத்தில் உடைந்து கிடக்கும் மின்கம்பத்தை சீர் செய்ய வேண்டும். இருளில் மூழ்கி கிடக்கும் நாகை அக்கரைப்பேட்டை மேம்பாலத்தில் எரியாமல் உள்ள மின்விளக்குகளை சீர் செய்து ஒளிர வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story