தூய்மையான விமான நிலையங்கள் பட்டியலில் மதுரைக்கு முதலிடம்


தூய்மையான விமான நிலையங்கள் பட்டியலில் மதுரைக்கு முதலிடம்
x
தினத்தந்தி 23 May 2022 11:39 PM IST (Updated: 24 May 2022 1:20 AM IST)
t-max-icont-min-icon

தூய்மையான விமான நிலையங்கள் பட்டியலில் மதுரைக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

மதுரை

மதுரை,

தூய்மையான விமான நிலையங்கள் பட்டியலில் மதுரைக்கு முதலிடம் கிடைத்துள்ளது.

ஆலோசனைக்குழு கூட்டம்

மதுரை விமான நிலைய ஆலோசனைக்குழு கூட்டம் ஆலோசனைக்குழுத் தலைவர் மாணிக்கம்தாகூர் எம்.பி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை விமான நிலைய விரிவாக்கப்பணிகள் குறித்தும், 24 மணி நேரமும் இயங்கும் வகையில் சர்வதேச விமான நிலையமாக மதுரையை மாற்றுவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்துவது பற்றியும், தென்மாவட்ட எம்.பிக்கள் விமானத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து விமான நிலையத்தில் வளர்ச்சியை மேம்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

முதல் இடம்

இதனை தொடர்ந்து எம்.பி.க்கள் மாணிக்கம்தாகூர், வெங்கடேசன் நிருபர்களிடம் கூறுகையில், மதுரை விமான நிலையத்தின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக புதிதாக 5 விமான நிறுத்துமிடங்களும், 2 ஹெலிகாப்டர் தளங்கள், ஒரு கூடுதல் பயணிகள் பாதையும் இணைக்கப்பட்டு வாகன நிறுத்தம், பஸ் வசதிகள் அனைத்தும் சிறந்த முறையில் மேம்படுத்தப்பட உள்ளன. தற்போது 95 சதவீதம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில், நீர்நிலை வகைமாற்றம் குறித்து தமிழக அரசு உத்தரவுகளை வெளியிட வேண்டிய தேவை உள்ளது.

இந்தியாவின் 34 விமான நிலையங்களில் தூய்மையான விமான நிலையங்களின் பட்டியலில் மதுரை விமான நிலையம் முதல் இடத்தையும், அதேபோல பயணிகளின் சேவைத்தர மதிப்பீட்டில் இந்திய விமான நிலையங்களில் 4-வது இடத்தையும் மதுரை விமான நிலையம் பெற்றுள்ளது. இதற்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

24 மணி நேரமும்...

கடந்த 10 ஆண்டுகளாக மதுரை விமான நிலைய பணிகள் வேகமெடுக்காமல் இருந்த நிலையில் தற்போது அந்த பணிகள் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. 24 மணி நேரம் விமான சேவை தொடங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக விமானத்துறை அமைச்சரை சந்திக்கவும் திட்டமிட்டு இருக்கிறோம். கேலாலம்பூர் உள்ளிட்ட மற்ற நகரங்களுக்கும் மதுரையில் இருந்து விமானங்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். விமான நிலைய வளர்ச்சிக்கு தொடர்ந்து குரல் கொடுப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story