திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா


திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா
x
தினத்தந்தி 15 Oct 2023 12:15 AM IST (Updated: 15 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கன்னியாகுமரி

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் பங்குனி மற்றும் ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டு ஐப்பசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று காலை நிர்மால்யம், அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து, கருட இலச்சினை பொறிக்கப்பட்ட கொடி ஆதிகேசவ பெருமாளின் பாதத்தில் பூஜைக்கு வைக்கப்பட்டது. தொடர்ந்து மேளதாளம் முழங்க கொடி மர பீடம் அருகே கொடி கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. அதைதொடர்ந்து கோவில் தந்திரி கோகுல், தங்க கொடி மரத்தில் கொடியேற்றினார்.

இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், உறுப்பினர் முரளிதரன் நாயர், குழித்துறை தேவஸ்வம் சூப்பிரண்டு சிவகுமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மதியம் அன்னதானம், இரவு சாமி நாற்காலி வாகனத்தில் பவனி வருதல் நடந்தது.

இதையடுத்து விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு நவநீதம் நாராயணியம் சமிதி வழங்கும் நாராயணீய பாராயணம், இரவு 9 மணிக்கு சாமி அனந்த வாகனத்தில் பவனி, 10 மணிக்கு பிரகலாத சரிதம் கதகளி ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து விழா நாட்களில் தினமும் மதியம் ஸ்ரீபூதபலி எழுந்தருளல், இரவு சாமி பவனி வருதல், கதகளி ஆகியவை நடக்கிறது.

விழாவில் 18-ந் தேதி இரவு 8 மணிக்கு கிருஷ்ணன் சன்னதியில் கொடியேற்றம் நடக்கிறது. 22-ந் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு நாதஸ்வர கச்சேரி, 9.30 மணிக்கு சாமி கருட வாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் ஆகியவை நடக்கிறது.

விழாவின் 10-ம் நாளான 23-ந் தேதி காலை 11 மணிக்கு திருவிலக்கு எழுந்தருளல், மாலை 7 மணிக்கு சிறப்பு நாதஸ்வர கச்சேரி, இரவு 8 மணிக்கு கருட வாகனத்தில் ஆராட்டுக்கு தளியல் ஆற்றுக்கு சாமி எழுந்தருளல் ஆகியவை நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் இணைந்து செய்துள்ளனர்.


Next Story