நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண பந்தக்கால் நாட்டு விழா


நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண பந்தக்கால் நாட்டு விழா
x

நெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா பந்தக்கால் நாட்டு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

திருநெல்வேலி

நெல்லை டவுன் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண விழாவையொட்டி நேற்று அம்பாள் சன்னதி தெரு முகப்பில் பந்தக்கால் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கோவில் செயல் அலுவலர் சிவமணி மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக வருகிற 29-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7.20 மணிக்கு கொடியேற்ற விழா நடைபெற இருக்கிறது. பின்னர் நவம்பர் மாதம் 8-ந்தேதி (புதன்கிழமை) 12 மணி அளவில் காட்சி மண்டபத்தில் அம்பாளுக்கு சுவாமி காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது. 9-ந்தேதி அதிகாலை 4 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் வைத்து திருக்கல்யாண நகிழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 3 நாட்கள் ஊஞ்சல் மண்டபத்தில் ஊஞ்சல் திருவிழாவும், 12-ந்தேதி இரவு சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் மறு வீடு பட்டினப்பிரவேசம் வீதி உலாவும் நடைபெறுகிறது.

இதுதவிர நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு காந்திமதி அம்பாள் சன்னதியில் இரவு 7 மணிக்கு லட்சார்ச்சனையும், கோவில் சோமவார மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளுக்கு தினமும் காலை 10 மணி அளவில் ஹோமம் வளர்த்து சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகமும், இரவு 8 மணியளவில் தீபாராதனையும் நடைபெறும்.

இந்த ஆண்டு நவராத்திரி கொண்டாட்டத்தின் அடையாளமான 'கொலு' சோமவார மண்டபத்தில் வைக்கப்பட்டு உள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 23-ந்தேதி வரை நவராத்திரி திருவிழா நடைபெறுகிறது. மேலும் இன்று முதல்28-ந்தேதி வரை லட்சார்ச்சனையும் நடைபெற இருக்கிறது.


Next Story