நெல், பருப்பு, எண்ணெய் வித்துக்களை முழுமையாக கொள்முதல் செய்ய இலக்கு


நெல், பருப்பு, எண்ணெய் வித்துக்களை முழுமையாக கொள்முதல் செய்ய இலக்கு
x

இந்த ஆண்டு சாகுபடி பரப்பு குறைந்ததால் நெல், பருப்பு, எண்ணெய் வித்துக்களை முழுமையாக கொள்முதல் செய்யும் மத்திய அரசின் நடவடிக்கை குறித்து வணிகர்கள் தகவல் அளித்தனர்.

விருதுநகர்

விளை பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், அதே வேளையில் விளை பொருட்களுக்கான உரிய விலை விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் பருப்பு வகை விலை உயர்வை கட்டுப்படுத்த சில்லறை விற்பனையாளர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு பருப்பு இருப்பு வைப்பதில் பல்வேறு கட்டுப்பாட்டுகளை கொண்டு வந்தது. இந்த கட்டுப்பாடுகள் முதலில் அக்டோபர் 31-ந் தேதி வரை என்றிருந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு இறுதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.கடந்த காலங்களில் குறைந்தபட்ச ஆதார விலை அடிப்படையில் விவசாய பொருட்களில் 25 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்தது. பின்னர் இது 40 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது.

தற்போது துவரம் பருப்பு, உளுந்்தம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் ஒரு சில எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றை விவசாயிகளிடம் இருந்து 100 சதவீதம் கொள்முதல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.

இதில் பல விளை பொருட்களின் விலையானது குறைந்தபட்ச ஆதார விலையை விட வெளிச்சந்தையில் அதிகமாகவும், சில பொருட்களின் விலை குறைந்தபட்ச ஆதார விலையை ஒட்டியும், வெகு சில பொருட்களின் விலை குறைந்தபட்ச ஆதார விலையைவிட குறைவாகவும் உள்ளது.தற்போதைய நிலையில் துவரம் பருப்பு குவிண்டால் வெளிச்சந்தையில் ரூ.9561 ஆக இருக்கும் நிலையில் குறைந்தபட்ச ஆதார விலை ரூ.7000 ஆகவும், உளுந்தம் பருப்பு வெளிச்சந்தையில் ரூ.6931 ஆகவும், குறைந்தபட்ச ஆதாரவிலை ரூ.6950 ஆகவும், பாசிப்பருப்பு வெளிச்சந்தையில் ரூ.7877 ஆக இருக்கும் நிலையில் குறைந்தபட்ச ஆதார விலை ரூ.8558 ஆகவும் உள்ளது. ஆனால், விவசாயிகளிடம் இருந்து ஆதார விலை அடிப்படையில் கொள்முதல் செய்தாலும் விவசாயிகளுக்கு நிதி இழப்பு ஏற்படாமல் தடுக்க என்ன செய்யலாம்? என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கருத்துக்களை மத்திய அரசு கேட்டு வருகிறது.

தென் மாநிலங்களில் வறட்சி உள்ளிட்ட காரணங்களால் நாடு முழுவதும் இந்த ஆண்டு சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. எனவே விளைபொருட்களின் வரத்து கடந்த ஆண்டைவிட குறைவாகவே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த ஆண்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை தடுக்கும் முன் எச்சரிக்கையைாகவே 100 சதவீத கொள்முதல் முயற்சியை மத்திய அரசு கையில் எடுத்து இருப்பதாக தெரிகிறது.

எடுத்துக்காட்டாக நடப்பாண்டில் பருப்பு வகை சாகுபடி என்பது 123.57 லட்சம் எக்டேர் நிலத்தில் நடந்து இருப்பதாக மதிப்பிடப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு 128.78 லட்சம் எக்டேரில் பருப்பு சாகுபடியாகி இருக்கிறது. இதனால்தான் பருப்பு, எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றை முழுமையாக கொள்முதல் செய்ய முடிவு செய்து இருக்கிறது.

எனினும் மழை காரணமாக சில இடங்களில் பருப்பு ஈரப்பதத்துடன் இருப்பதாகவும், எனவே சற்று தாமதமாக இந்த கொள்முதல் நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.இதே போன்று பஞ்சாப்-அரியானா போன்ற மாநிலங்களில் அதிக மழை காரணமாகவும், தென் மாநிலங்களில் வறட்சி காரணமாகவும் நெல் உற்பத்தி குறைந்துள்ள நிலையில், விவசாயிகளிடம் முழுமையாக நெல் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story