"மாநில உரிமைகள் பறிக்கப்பட்டால் அதிமுக ஒருபோதும் ஏற்காது" - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
மாநில உரிமைகள் பறிக்கப்பட்டால் அதிமுக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,
சென்னை ராயப்பேட்டையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கோட்பாட்டை பின்பற்றி வருகிறோம். மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப்படும் விஷயங்களை அதிமுக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. மத்திய மந்திரிகள் தமிழகத்திற்கு வரகூடாது என்று யாருமே சொல்லகூடாது. அவர்கள் வருவதால் என்ன பயன் என்பது போக போகத்தான் தெரியும்.
100 மத்திய மந்திரிகள் கூட தமிழகத்திற்கு வரட்டும் , ஆனால் அவர்களால் தமிழகத்துக்கு நல்லது நடந்தால் சரி உரிமைகளில் தலையிட்டால் கண்டிப்பாக எதிர்ப்போம்.
எதிர்கட்சி துணைத் தலைவர் இருக்கை ஒதுக்குவது தொடர்பாக பல முறை கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. பேரவைத் தலைவருக்கு விதி இருக்கிறது. மரபு இருக்கிறது. மாண்புகள் இருக்கிறது. அதன் அடிப்படையில் கடைப்பிடிப்பதுதான் ஒரு நல்ல சபாநாயகருக்கு அழகு. சட்டமன்றத்தில் நாளை சொல்வதாக சபாநாயகர் சொல்லியிருக்கிறார். சபாநாயகர் சொல்வதை பொறுத்து சட்டமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வது குறித்து சட்டமன்ற கட்சி முடிவும்.
இவ்வாறு அவர் கூறினார்.