அடுத்த டிசம்பருக்குள் அதிமுக ஒருங்கிணையும்: வைத்திலிங்கம்
நாங்கள் யாரையும் இழக்க விரும்பவில்லை என்று வைத்திலிங்கம் கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சையில், முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அ.தி.மு.க. தொண்டர்கள் 100-க்கு 99.9 சதவீதம் பேர் அ.தி.மு.க. இணைய வேண்டும் என்றும், 2026-ல் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்றும் எண்ணுகிறார்கள். அந்த எண்ணத்தை நிச்சயமாக ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். ஆத்மா நிறைவேற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. 2026-ல் தமிழகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி ஏற்படும். நாங்கள் எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல, மற்றவர்கள் யாரையும் இழக்க விரும்பவில்லை.
இந்த இயக்கம் ஒன்றாக வேண்டும் என்று நினைக்காதவர்கள், விரும்பாதவர்கள் அவர்களாக வெளியேறி விடுவார்கள். இது காலத்தின் கட்டாயம். அதாவது ஒற்றை தலைமை, இரட்டைத்தலைமை என்பது இணையும்போது ஒரு முடிவுக்கு வரும். அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் ஒரு நல்ல முடிவு ஏற்படும். நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் எடப்பாடி பழனிசாமி இந்த இயக்கத்தை அழித்து விடுவார் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். உண்மையும் அதுதான்.
2021-ம் ஆண்டு தேர்தலில் நாங்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தே.மு.தி.க.வை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று வற்புறுத்தினோம். அப்போது, நாம் தனித்து நின்று 150 இடங்கள் பிடித்துவிடலாம் என்று சொல்லி எல்லோரையும் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றினார். அதுபோல நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி வரும். 40 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பெற்று விடலாம் என்று கூறினார் ஆனால் 20 சதவீத வாக்குகள் வரும் அளவுக்கு மோசமான நிலைக்கு கொண்டு வந்து விட்டார் அதை நினைத்து டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க சசிகலா சுற்றுப்பயணம் செல்கிறார். அவரையும், டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு தொண்டனின் எண்ணம். 2026-ல் நிச்சயம் அ.தி.மு.க. ஆட்சிதான் அமையும். இவ்வாறு அவர் கூறினார்.