ஆயுதபூஜையை முன்னிட்டு ஏலக்கடைகளில் வாழைத்தார்கள் குவிந்தன
ஆயுத பூஜையை முன்னிட்டு புதுக்கோட்டை ஏலக்கடைகளில் வாழைத்தார்கள் குவிந்தன.
ஆயுத பூஜை
நவராத்திரி விழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி பொதுமக்கள் வீடுகளில் கொலு வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இதேபோல் கோவில்களிலும் கொலு வழிபாடு நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழாவின் சிகர விழாவான ஆயுதபூஜை நாளை மறுநாளும் (திங்கட்கிழமை), சரஸ்வதி பூஜை 24-ந் தேதியும் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி அன்றைய நாட்களில் தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், வீடுகளில் வாழைப்பழம், தேங்காய், பொரி, அவல், கடலை, சர்க்கரை பொங்கல், பழ வகைகள் உள்ளிட்டவை வைத்து வழிபாடு நடத்தப்படும்.
வாழைத்தார்கள்
ஆயுத பூஜையையொட்டி வாழைப்பழம் மற்றும் பூஜை பொருட்கள் விற்பனை அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் புதுக்கோட்டை சந்தைபேட்டையில் ஏலக்கடைகளுக்கு வாழைத்தார்கள் நேற்று அதிகளவில் குவிந்தன. ஒரே நாளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் வரை ஏலத்துக்கு வந்தன. இதனை விவசாயிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விற்பனைக்காக கொண்டு வந்தனர்.
வாழைப்பழ மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள் வாழைத்தார்களை போட்டிப்போட்டு ஏலம் எடுத்தனர். இதில் பூவன், ரஸ்தாலி, செவ்வாழை உள்ளிட்ட வாழைத்தார்கள் அதன் தரத்துக்கு ஏற்ப விலை போனது. பூவன் தார் குறைந்தது ரூ.300 முதல் ஏலம் போனது. செவ்வாழை தார் ரூ.500 முதல் ஏலம் போனது.
பொரி வியாபாரம்
வாழைத்தார்களை பழுக்க வைத்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) கடைகளுக்கு பழங்கள் விற்பனைக்கு வந்துவிடும். இதேபோல பொரி வியாபாரமும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மொத்த வியாபாரிகளிடம் இருந்து சில்லறை வியாபாரிகள் பொரி, கடலைகளை வியாபாரத்திற்காக வாங்கி செல்கின்றனர். 6 கிலோ எடை கொண்ட ஒரு பொரி மூட்டை ரூ.390-க்கு விற்கிறது. பொரி, அவல், பொட்டுக்கடலை, வெல்லம் ஆகியவற்றை பாக்கெட்டுகளை மொத்தமாக அடைத்து வைத்தும் விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப வாங்கி செல்கின்றனர்.
தொடர் விடுமுறையின் காரணமாக அரசு அலுவலகங்களில் சில இடங்களில் நேற்று ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.