தூத்துக்குடியில் ஆயுத பூஜையை முன்னிட்டுபூக்கள் விலை கிடுகிடு உயர்வு


தினத்தந்தி 23 Oct 2023 12:15 AM IST (Updated: 23 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது. வாழைத்தார் விலையும் அதிகரித்து விற்கப்படுகிறது.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. வாழைத்தார் ரூ.300 வரை விலை அதிகரித்து விற்கப்பட்டது.

ஆயுத பூஜை

நவராத்திரி விழாவின் கடைசி நாள் ஆயுதபூஜையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று வீடுகளிலும், கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம். தொழில் நிறுவனங்களிலும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. பூஜையின்போது கொண்டைக்கடலை, அவல் பொரி உள்ளிட்டவைகளை படைத்து வழிபடுவது வழக்கம். இதையொட்டி பூஜை பொருட்களை வாங்குவதற்காக மக்கள் நேற்று மார்க்கெட்டுக்கு வந்தனர். தூத்துக்குடி சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான வாழைக்கன்றுகள் விற்பனைக்காக மார்க்கெட் பகுதியில் குவித்து வைக்கப்பட்டு இருந்தன. இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

பூ மார்க்கெட்டு

மேலும் பூமார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அனைத்து பூக்களின் விலையும் நேற்று முன்தினத்தை விட நேற்று அதிகரித்து விற்பனையானது. நேற்று முன்தினம் ரூ.1000-க்கு விற்பனையான ஒருகிலோ மல்லிகைப்பூ ரூ.1200-க்கும், ரூ.1200-க்கு விற்பனையான பிச்சிப்பூ ரூ.1500-க்கும், ரூ.40-க்கு விற்பனையான கோழி கொண்டைபூ ரூ.60-க்கும், ரூ.200-க்கு விற்பனையான பன்னீர் ரோஸ் ரூ.300-க்கும், ரூ.200-க்கு விற்பனையான பட்டன் ரோஸ் ரூ.300-க்கும், ரூ.400-க்கு விற்பனையான அரளிப்பூ ரூ.500-க்கும், ரூ.30-க்கு விற்பனையான செண்டுப்பூ ரூ.50-க்கும், பச்சை ரூ.40-க்கும், ரோஜா ரூ.500, மரிக்கொழுந்து ரூ.200-க்கும், ரூ.200-க்கு விற்பனையான செவ்வந்திப்பூ ரூ.300-க்கும் விற்பனையானது. இதே போன்று சிறிய பாக்கெட்டுகளாக அவல், சோளப்பொரி, அரிசிப்பெரி உள்ளிட்டவையும் விற்பனைக்காக அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. மாவிலை, பனைஓலை தோரணங்களும் விற்பனை செய்யப்பட்டன.

வாழைத் தார்

பருவமழை போதிய அளவு பெய்யாததால் தூத்துக்குடி மார்க்கெட்டுக்கு வாழைத்தார் வரத்து குறைந்து உள்ளது. இதனால் வாழைத்தார்களின் விலை அதிகரித்து உள்ளது. கடந்த வாரத்தைவிட ரூ.200 முதல் ரூ.300 வரை விலை உயர்ந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். நேற்று நாடு ரூ.1100-க்கும், செவ்வாழை ரூ.1150-க்கும், பச்சை 450-க்கும், பூலான்செண்டு ரூ.800-க்கும், சக்கை ரூ.1100-க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதனை மக்கள் ஆர்வமுடன் வாங்கின சென்றனர்.

தூத்துக்குடி மார்க்கெட் பகுதியில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story