கோடைமழையை பயன்படுத்தி 2-ம் போக விவசாய பணி தீவிரம்


கோடைமழையை பயன்படுத்தி 2-ம் போக விவசாய பணி தீவிரம்
x
தினத்தந்தி 6 May 2023 12:15 AM IST (Updated: 6 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோடைமழையை பயன்படுத்தி 2-ம் போக விவசாய பணி தீவிரமாக நடந்து வருகிறது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனது. இதனால் சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் எக்டேரில் நெல் விவசாயம் செய்த விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்தனர். நெல் கைவிட்டதால் விவசாயிகள் பருத்தி, மிளகாய் உள்ளிட்டவைகளை பயிரிட்டு அறுவடை செய்து வருகின்றனர். மாவட்டத்தில் வைகை தண்ணீர் பாயாத பகுதிகளில்தான் இந்த நிலை உள்ளது. ஆனால், வைகை தண்ணீர் பாயும் பகுதிகளில் நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது. வைகை நீரை பயன்படுத்தி விவசாயிகள் தங்கள் நிலங்களில் முதல்போக நெல் சாகுபடியை அறுவடை செய்தனர். முதல்போக அறுவடைக்கு பின்னர் தங்கள் பகுதி நீர்நிலைகளில் தண்ணீர் இருப்பு உள்ளதால் அதனை நம்பி மீண்டும் 2-ம் போக சாகுபடி செய்யும் எண்ணத்தில் நிலங்களில் உழுது மீண்டும் விதைத்துள்ளனர். குறிப்பாக திருஉத்தரகோசமங்கை, பனைக்குளம், மேலசீத்தை, நல்லாங்குடி போன்ற பகுதிகளில் 2-ம் போக விவசாயம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே மாவட்டத்தில் கடந்த சிலதினங்களாக கோடை மழை பரவலாக பெய்துவருகிறது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயி கருங்கன் கூறியதாவது:- எங்கள் பகுதி கண்மாயில் வைகை தண்ணீர் இன்னும் உள்ளது. அதனை நம்பி 2-ம் போக விவசாய பணிகளை தொடங்கினோம். தற்போது பரவலாக மழை பெய்து வருவது பயன் உள்ளதாக அமைந்துள்ளது. மழை ஓரளவு பெய்து வருவதால் கண்மாய் நீரை நாங்கள் எடுக்கவில்லை. தேவைப்படும்போது எடுத்து கொள்ளலாம் என்று மழை நீரையே பயன்படுத்தி வருகிறோம். இந்த ஆண்டு 2-ம் போக விவசாயம் நன்றாக இருக்கும் என்று நம்புகிறோம் என்றார். ராமநாதபுரத்தில் இருந்து திருஉத்தரகோசமங்கை செல்லும் வழியில் சாலையின் இருபுறமும் 2-ம் போக விவசாய பணிகள் நடைபெற்று வருவதால் பயிர்கள் வளர்ந்து பச்சை கம்பளம் விரித்ததுபோன்று காட்சியளிக்கிறது.


Next Story