வளர்ச்சி திட்டப்பணிகளை வேளாண் அதிகாரி ஆய்வு
தியாகதுருகம் பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை வேளாண் அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் அருகே ஒகையூர், ஈய்யனூர் ஆகிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி ஆய்வு மேற்கொண்டார். அதன்படி ஒகையூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்ட வேளாண் கருவிகள், தார்ப்பாய் ஆகியவற்றை பெற்ற விவசாயிகளிடம் அவற்றின் தரம் மற்றும் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து அதே பகுதியில் இலவசமாக தென்னங்கன்றுகளை பெற்று அவற்றை பராமரிக்கும் விவசாயிகளிடம் கலந்துரையாடினார். மேலும் தரிசு நில மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றி நெல் மற்றும் மக்காச்சோளம் பயிர்செய்யப்பட்டிருந்த விவசாய நிலத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஈய்யனூர் கிராமத்தில் அரசு நிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்பு அமைய உள்ள இடத்தினை ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) விஜயராகவன், வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு, உதவி வேளாண்மை அலுவலர் வினோத் மற்றும் விவசாயிகள் உடன் இருந்தனர்.