கீழப்பழுவூர் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வேளாண்மை பொறியியல் ஆய்வகம்
கீழப்பழுவூர் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வேளாண்மை பொறியியல் ஆய்வகத்தை அமைச்சர் சிவசங்கர் திறந்து வைத்தார்.
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் வேளாண்மை பொறியியல் ஆய்வகத்தினை போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். அரியலூர் எம்.எல்.ஏ. சின்னப்பா முன்னிலை வகித்தார். வேளாண்மை பொறியியல் ஆய்வகத்தினை திறந்து வைத்து அமைச்சர் பேசும்போது, அரசு கல்லூரிகளில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.3 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குவதற்கு முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார். 'நான் முதல்வன்' திட்டத்தையும், வேலைவாய்ப்பினை ஏற்படுத்தும் வகையிலும் பல்வேறு நிறுவனங்களை அழைத்து தொழில் தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். வருகிற ஜனவரி மாதம் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படவுள்ளது. இதன்மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தோல் இல்லாத காலணிகளை தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டியுள்ளார். இதனால் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார். நிகழ்ச்சியில், ஆர்.டி.ஓ. ராமகிருஷ்ணன், அரசு தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் தமிழரசு, திருமானூர் ஒன்றியக்குழு தலைவர் சுமதி அசோக் சக்கரவர்த்தி, கீழப்பழுவூர் ஊராட்சி மன்ற தலைவர் தனலெட்சுமி மருதமுத்து மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.