நிலக்கடலை அறுவடை பணி தீவிரம்
மடத்துக்குளம் பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி தீவிரமடைந்துள்ள நிலையில் கூலி ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் சிரமங்களை சந்திக்கின்றனர்.
மடத்துக்குளம் பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி தீவிரமடைந்துள்ள நிலையில் கூலி ஆட்கள் பற்றாக்குறையால் விவசாயிகள் சிரமங்களை சந்திக்கின்றனர்.
எண்ணெய் வித்துப்பயிர்கள்
இந்தியாவில் சுமார் 640 லட்சம் ஏக்கர் பரப்பளவில் எண்ணெய் வித்துப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு 30 மில்லியன் டன் அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. 1990-ல் ஏற்பட்ட மஞ்சள் புரட்சியினால் இந்த அளவுக்கு உற்பத்தி அதிகரித்து, தற்போது உலக அளவில் எண்ணெய் வித்து உற்பத்தியில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. ஆனாலும் இந்த உற்பத்தி நமது தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லாததால் சமையல் எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைஉள்ளது.
எனவே நிலக்கடலை, சூரியகாந்தி, கடுகு, ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துப்பயிர்கள் சாகுபடியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் எண்ணெய் வித்துப்பயிர்கள் சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டாத நிலையே உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக உள்ளது கூலி ஆட்கள் பற்றாக்குறையாகும். அந்தவகையில் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகக்குறைந்த அளவிலேயே நிலக்கடலை சாகுபடி நடைபெற்று வருகிறது.
மகசூல் குறைவு
தற்போது பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலையை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
'மடத்துக்குளம் பகுதியில் கரும்பு, நெல், மக்காச்சோளம் மற்றும் காய்கறிப்பயிர்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆனால் போதிய விலையின்மை என்பது விவசாயிகளை நோக்கி நகர்த்துகிறது என்று சொல்லலாம். எண்ணெய் வித்துப்பயிர்களுக்கு தேவை அதிகம் இருப்பதால் நல்ல விலை கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தற்போது கிணற்றுப்பாசனத்தில் நிலக்கடலை சாகுபடி மேற்கொண்டோம். மண்ணில் போதுமான சத்துக்கள் இல்லாததால் ஒவ்வொரு தூர்களிலும் குறைந்த அளவிலேயே காய்கள் பிடித்துள்ளது. பருப்பும் சிறியதாகவே உள்ளது. இதனால் ஏக்கருக்கு 1000 கிலோ வரை மகசூல் கிடைக்க வேண்டிய இடத்தில் சுமார் 500 கிலோ அளவுக்கே கிடைக்கும் சூழல் உள்ளது.
கூலி ஆட்கள் பற்றாக்குறை
தற்போது விவசாயப் பணிகளுக்கு கூலி ஆட்கள் கிடைப்பது சிரமமாக உள்ளது. இதனால் வெளியூர்களிலிருந்து வாகனங்கள் மூலம் ஆட்களை அழைத்து வந்து அறுவடைப்பணிகளை மேற்கொள்கிறோம். முன்னதாக களை எடுத்தல், பூக்கும் பருவத்தில் மண் அணைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கும் ஆட்கள் கிடைக்காமல் கடும் சிரமத்தை சந்தித்தோம். வேலை செய்ய ஆட்களும் இல்லை, விளை பொருட்களுக்கு விலையுமில்லை, போதிய விளைச்சலுமில்லை. இதே நிலை நீடித்தால் பல விவசாயிகள் விவசாயத்தொழிலை விட்டு மாற்றுத்தொழிலை தேடிச்செல்லும் நிலை ஏற்படும்'.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.