பி.ஏ.பி. பாசனத்திற்கு 7 சுற்று தண்ணீர் வழங்க விவசாயிகள் கோரிக்கை
பி.ஏ.பி. பாசனத்திற்கு 7 சுற்று தண்ணீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கையுடன் விவசாயிகள் வாய்க்காலில் இறங்கும் போராட்டத்தை போலீசார் தடுத்ததால் கண்டன ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது.
பி.ஏ.பி. பாசனத்திற்கு 7 சுற்று தண்ணீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கையுடன் விவசாயிகள் வாய்க்காலில் இறங்கும் போராட்டத்தை போலீசார் தடுத்ததால் கண்டன ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது.
பி.ஏ.பி. பாசனம்
திருமூர்த்தி அணையில் இருந்து பல்லடம், பொங்கலூர், வெள்ளகோவில், காங்கயம் உள்பட பல்வேறு இடங்களில் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் பாசனம் நடைபெற்று வருகிறது. தற்போது 4-வது மண்டலத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீரானது நான்கு சுற்றுகள் மட்டுமே விடப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனை ஏற்றுக்கொள்ளாத தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் 7 சுற்று தண்ணீர் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து நேற்று பொங்கலூர் வழியாகச் செல்லும் பி.ஏ.பி. வாய்க்காலில் இறங்கும் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
அறிவித்தபடி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனத் தலைவர் ஈசன் தலைமையில் விவசாயிகள் பொங்கலூர் ஒன்றிய அலுவலகம் அருகே ஒன்று திரண்டனர். அங்கிருந்து கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே செல்லும் பி.ஏ.பி. வாய்காலில் இறங்குவதற்கான முன்னேற்பாடுகளை எடுத்தனர். ஆனால் போலீசார் அதற்கு அனுமதி மறுத்தனர்.
ஆர்ப்பாட்டம்
இதனால் பொங்கலூர் பஸ் நிறுத்தம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் பேசும்போது, வழக்கமாக 7 சுற்று தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு 4 சுற்று மட்டுமே வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. மீதமுள்ள தண்ணீரை தனியார் கோழி பண்ணைகளுக்கும், நார் தொழிற்சாலைகளுக்கும் மற்றும் பெரும் தொழில் அதிபர்களின் நிறுவனங்களுக்கும் திருட்டுத்தனமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எங்களுக்கு 7 சுற்று தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பொங்கலூர் பி.ஏ.பி. உதவி செயற்பொறியாளர் அசோக் பாபு பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் விவசாயிகள் பிரதிநிதிகள் பல்லடம் தாசில்தார் அலுவலகம் சென்று அங்கு தங்கள் கோரிக்கையை தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் அங்கிருந்து பல்லடம் கிளம்பிச் சென்றனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் முத்து விசுவநாதன், மேற்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம், கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், பிரசார குழு மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுமியா தலைமையில் அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மேற்பார்வையில் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.