அக்னிவீரன், சப்தகன்னிகள் கோவில் பால்குட ஊர்வலம்
குத்தாலம் அருகே அக்னிவீரன், சப்தகன்னிகள் கோவில் பால்குட ஊர்வலம்
குத்தாலம்:
குத்தாலம் அருகே கடலங்குடி கிராமத்தில் அக்னிவீரன், சப்த கன்னிகள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் 5-ம் ஆண்டு திருவிழா கடந்த 18-ந் தேதி அம்மன் அபிஷேகம், காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து அக்னிவீரன், கருமாரி அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, ஆராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான கரகம், பால்குட காவடி நடந்தது. முன்னதாக விரதம் இருந்த பக்தர்கள் கங்கணம் கட்டிக்கொண்டு கடலங்குடி காவேரி ஆற்றங்கரையில் இருந்து கரகம், பால்குடம், காவடி எடுத்து பச்சை காளி, பவளகாளி ஆட்டத்துடன் மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கிராமமக்கள், நாட்டாண்மைகள் செய்திருந்தனர்.
இதில் பாதுகாப்பு பணியில் குத்தாலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.