மழையுடன் தொடங்கிய அக்னி நட்சத்திரம்
மழையுடன் அக்னி நட்சத்திரம் தொடங்கியது.
அக்னி நட்சத்திரம்
அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியது. சித்திரை மாதத்தில் தொடங்கி வைகாசி மாதம் முதல் வாரம் வரை உள்ள காலகட்டமே மிக அதிக வெப்பமுள்ள காலமான அக்னி நட்சத்திரம் எனப்படுகிறது. கத்திரி வெயிலான இந்த காலகட்டத்தில் வெப்பநிலை இயல்பை விட 5 டிகிரி செல்சியஸ் உயரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த அக்னி நட்சத்திரம் வருகிற 29-ந் தேதி முடிவடைகிறது.
இந்நிலையில் நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் வெயில் சுட்டெரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக மழை பெய்தது. இதில் திருச்சி மாநகர் மற்றும் புறநகரில் நேற்று காலை முதல் மதியம் வரை வெயில் அடித்தது. பின்னர் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. மதியம் 3 மணிக்கு தொடங்கிய மழை 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது.
நனைந்தபடி சென்றனர்
இதில் பாரதிதாசன் சாலை, சாஸ்திரி சாலை, வில்லியம்ஸ் சாலை, உழவா் சந்தை, காந்தி மார்க்கெட், உறையூர், ஒத்தக்கடை சிக்னல் பகுதிகள் உள்ளிட்ட சாலைப் பகுதிகள் மற்றும் தெருக்களிலும் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. இந்த திடீர் மழையால் சாலையில் நடந்து சென்றவர்கள், இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் நனைந்தபடி சென்றனா். முக்கிய சாலை சந்திப்புகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இந்த மழை காரணமாக, திருச்சி மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
முன்னதாக கடந்த வாரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. வெயிலின் தாக்கத்தால் மக்கள் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் இடையிடையே பெய்து வரும் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொட்டியம்
தொட்டியம் மற்றும் காட்டுப்புத்தூர் பகுதிகளில் நேற்று மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் தொட்டியம், கார்த்திகைப்பட்டி, காரைக்காடு, நத்தம், எம்.புத்தூர், காடுவெட்டி, சீலைப்பிள்ளையார்புத்தூர், உன்னியூர், ஸ்ரீராமசமுத்திரம், பெரியப்பள்ளிபாளையம், பிடாரமங்கலம், எம்.களத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 2 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மழையளவு விவரம்
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் நேற்று காலை 6 மணி வரை பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
கல்லக்குடி-43.4, லால்குடி-26.4, நந்தியாறு-88.4, புள்ளம்பாடி-45.2, தேவிமங்கலம்-24.8, சமயபுரம்-20, சிறுகுடி-9.4, வாத்தலை-9, மணப்பாறை-1.2, பொன்னணியாறு-4.8, கோவில்பட்டி-8.2, முசிறி-2.8, புலிவலம்-4, நாவலூர் குட்டப்பட்டு-2, துவாக்குடி-16.1, கொப்பம்பட்டி-3, தென்புறநாடு-31, துறையூர்-2, பொன்மலை-11.4, திருச்சி ஏர்போர்ட்-10.7, திருச்சி ஜங்ஷன்-10, திருச்சி டவுன்-15 ஆகும். திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 388.8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 16.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.