மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
சிவகிரி அருகே குடும்பத்தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிவகிரி:
சிவகிரி அருகே குடும்பத்தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பந்தல் அமைக்கும் தொழிலாளி
தென்காசி மாவட்டம் சிவகிரி பஸ் நிலையம் அருகே உள்ள கீழமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிக்குட்டி என்ற மாரியப்பன் (வயது 55), பந்தல் அமைக்கும் தொழிலாளி. இவரது மனைவி சீதாலட்சுமி (48).
மாரியப்பனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. கடந்த 1½ ஆண்டாக சீதாலட்சுமி தனது கணவரை பிரிந்து மருமகள் வீரம்மாளுடன் அருகாமையில் காப்பிக் கொட்டை தோட்டம் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இதனால் மாரியப்பன் மட்டும் தனியாக வீட்டில் வசித்து வந்தார்.
மனைவி கழுத்து அறுப்பு
அங்குள்ள கோவிலுக்கு சீதாலட்சுமி சாமி தரிசனம் செய்துவிட்டு, வீட்டிற்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, எதிரே மாரியப்பன் வருவதை கண்டு சீதாலட்சுமி மற்றொரு தெரு வழியாக சென்றார். இதை பார்த்த மாரியப்பன் ஓடிச் சென்று சீதாலட்சுமியை வழிமறித்து, தகாத வார்த்தைகளால் பேசி தகராறில் ஈடுபட்டார்.
தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த மாரியப்பன், சீதாலட்சுமியின் தலைமுடியை பிடித்து இழுத்து தான் வைத்து இருந்த அரிவாளால் கழுத்தை ஆட்டை அறுப்பது போல் அறுத்ததாக கூறப்படுகிறது. இதில் ரத்தம் பீறிட்டு சீதாலட்சுமி அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மாரியப்பன் அங்கிருந்து தப்பி ஓடி தனது வீட்டிற்கு வந்தார்.
பயத்தில் தற்கொலை
அரிவாளால் அறுத்ததால் சீதாலட்சுமி ரத்த வெள்ளத்தில் இறந்து இருப்பார். இதனால் தன்னை போலீசார் பிடித்து சென்றுவிடுவார்கள் என்று பயந்த மாரியப்பன் வீட்டின் கதவை உட்புறமாக பூட்டி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் நவமணி மற்றும் போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றனர்.
உயிருக்கு போராடிய சீதாலட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தென்காசி ஆஸ்பத்திரிக்கும், அங்கிருந்துபாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
போலீசார் விசாரணை
பின்னர் மாரியப்பனை பிடிக்க போலீசார் அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு கதவு உட்புறமாக பூட்டப்பட்டு இருந்ததால் அதை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது மாரியப்பன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகிரி அருகே மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.