42 ஆண்டுகளுக்கு பிறகு 75-வது சுதந்திர தினத்தில் ஒலித்த சங்கு
42 ஆண்டுகளுக்கு பிறகு 75-வது சுதந்திர தினத்தில் ஒலித்த சங்கு
2-ம் உலகப்போரின் போது தஞ்சையில் ஒலித்த சங்கு 42 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது மாநகராட்சி ஏற்பாட்டின் பேரில் 75-வது சுதந்திர தினத்தில் ஒலிக்க தொடங்கி உள்ளது. இந்த சங்கு தினமும் 5 முறை ஒலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
2-ம் உலகப்போர்
2-ம் உலகப்போர் கடந்த 1939-ம் ஆண்டு முதல் 45-ம் ஆண்டு வரை நடைபெற்றது. இந்த உலகப் போரின் போது இரவு நேரங்களில் விமானங்களால் குண்டுகள் வீசப்பட்டன. இந்த குண்டு வீச்சில் இருந்து நகர மக்களை காப்பதற்காக தஞ்சையில் ஒலி எழுப்பும் வகையில் சங்கு அமைக்கப்பட்டது. இந்தசங்கு தஞ்சை ஆயுதப்படை மைதானத்தின் பின்பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே அமைக்கப்பட்டது.
இந்த சங்கு இரவு நேரங்களில் ஒலித்தவுடன் உடனடியாக தஞ்சை நகரில் விளக்குகள் அணைக்கப்படும். இதனால் நகரம் இருக்கும் இடமே தெரியாத நிலை ஏற்படும். முற்றிலும் இரும்பு தூண்களை கொண்டு அமைக்கப்பட்ட இந்த சங்கு மின்சாரம் உதவியுடன் ஒலித்தது. தஞ்சை நகரம் முழுவதும் கேட்கும் வகையில் நிறுவப்பட்ட இந்த சங்கு போர் முடிந்த பின்னர் பணியாளர்களின் வேலை நேரத்தை நினைவூட்டும் வகையில் ஒலித்தது.
42 ஆண்டுகளுக்குப்பிறகு.....
ஆனால் 1980 -ம் ஆண்டுக்குப் பின்னர் இந்த சங்கு ஒலிக்கவில்லை. இதனால் சங்கு துருபிடித்த நிலையில் பராமரிப்பு இன்றி காட்சி அளித்தது. இந்த நிலையில் இந்த சங்கை மீண்டும் ஒலிக்க வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி ஆணையரை சந்தித்து வலியுறுத்தினர். இதையடுத்து சங்கை ஒலிக்க வைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி பழைய சங்கு சீரமைக்கப்பட்டு, 42 ஆண்டுகளுக்குப்பிறகு 75-வதுசுதந்திர தினமான நேற்று ஒலிக்க வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் ஜெகதீசன், மண்டலக்குழு தலைவர் மேத்தா, உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன், மேலாளர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
5 முறை ஒலிக்கும்
இதில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் கலந்து கொண்டு பொத்தானை அழுத்தி சங்கை ஒலிக்க வைத்தார். பின்னர் அவர் கூறுகையில், "தற்போது முதல் கட்டமாக போரில் ஒலித்த சங்கு மீண்டும் ஒலிக்க வைக்கப்பட்டு உள்ளது. இதே போல் தஞ்சை மாநகரில் 5-க்கும் மேற்பட்ட இடங்களில் சங்கு நிறுவப்பட்டு ஒலிக்க வைக்கப்படும். தற்போது இயக்கப்பட்ட சங்கு தினமும் காலை 6, 9 மதியம் 12, மாலை 6 இரவு 9 மணி என தினமும் ஐந்து முறை ஒலிக்கும்"என்றார்.