4½ மாதங்களுக்கு பிறகு கனியாமூர் தனியார் பள்ளி திறப்பு தோரணம், வாழை மரம் கட்டி மாணவர்களுக்கு வரவேற்பு
கனியாமூர் தனியார் பள்ளி 4½ மாதங்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது.
சின்னசேலம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி, பள்ளி விடுதியில் தங்கியிருந்து பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் 13-ந்தேதி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் இறந்தார்.
இதையடுத்து மாணவியின் உறவினர்கள் நடத்திய போராட்டம் காரணமாக அன்று முதல் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் 17-ந்தேதி நடந்த வன்முறை போராட்டத்தில், பள்ளி சூறையாடப்பட்டது. மேலும் பள்ளி வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், போலீஸ் வாகனங்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டது.
ஆன்லைன் வகுப்புகள்
இதற்கிடையே மாணவி சாவு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாரும் தனித்தனியாக விசாரணை நடத்தி தொடர்புடையவர்களை கைது செய்தனர்.
இந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி, 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சின்னசேலம் அருகே ஆ.வாசுதேவனூரில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. மற்ற மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது.
இதற்கிடையே பள்ளியை மறுசீரமைக்க அனுமதி வழங்கக்கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட அதிகாரி மற்றும் போலீசார் மேற்பார்வையில் பள்ளியில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவடைந்தது. இதையடுத்து 5-ந்தேதி(அதாவது நேற்று) முதல் 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
நேரடி வகுப்புகள் தொடக்கம்
அதன்படி நேற்று நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. மாணவர்களை வரவேற்கும் விதமாக தோரணம், வாழை மரங்கள் கட்டப்பட்டிருந்தன. தொடர்ந்து காலையில் மாணவர்கள் பள்ளி வாகனம் மூலம் அழைத்து வரப்பட்டனர். பின்னர் இறைவணக்கம் நடத்தப்பட்டு, வகுப்புகள் நடைபெற்றது.
சுமார் 4½ மாதங்களுக்கு பிறகு பள்ளி திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கியதால் மாணவர்கள் ஆர்வத்துடன் பள்ளிக்கு வந்திருந்தனர். மற்ற மாணவர்களுக்கு வழக்கம்போல் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக பள்ளி வளாகம் முன்பு கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஜய்கார்த்திக் ராஜா தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமேனி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.