3 நாட்களுக்கு பிறகு தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு சென்றனர்


3 நாட்களுக்கு பிறகு தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு சென்றனர்
x
தினத்தந்தி 8 July 2023 12:15 AM IST (Updated: 9 July 2023 4:39 PM IST)
t-max-icont-min-icon

3 நாட்களுக்கு பிறகு தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.

தூத்துக்குடி

பலத்த காற்று

தென்மேற்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்று வீசியது. நேற்றும் காலை முதலே காற்று வீசியது. மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக சாரல் மழை பெய்தது.

தூத்துக்குடியில் அவ்வப்போது மேகக்கூட்டங்கள் திரண்டு லேசான வெயில் அடித்ததால் ரம்மியமான சூழல் நிலவியது. அதே நேரத்தில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடந்த 4-ந் தேதி முதல் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

கடலுக்கு சென்ற மீனவர்கள்

அதன்படி, தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மற்றும் பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்து இருந்தனர். வருகிற 9-ந் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

எனினும் கடந்த 3 நாட்களாக கடலுக்கு செல்லாமல் இருந்த விசைப்படகு மீனவர்கள் தொழில் பாதிக்கப்பட்டதால் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். இதனால் நேற்று காலையில் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 207 விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

மீன்கள் விலை குறைய வாய்ப்பு

3 நாட்களுக்கு பிறகு விசைப்படகுகள் கடலுக்கு சென்று இருப்பதால் மீன்கள் வரத்து அதிகரிக்கும். இதனால் விலை சற்று குறைய வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோன்று தூத்துக்குடி அருகே உள்ள வேறு சில கிராமங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆனால் திரேஸ்புரம், இனிகோநகர், புதிய துறைமுகம் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து கடலுக்கு செல்லவில்லை.


Next Story