வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
பெரம்பலூரில் அட்வகேட்ஸ் அசோசியேசன் அமைப்பின் அவசர பொதுக்குழு கூட்டம், அதன் தலைவர் திருநாவுக்கரசு மற்றும் செயலாளர் கிருஷ்ணராஜ் முன்னிலையில் நடந்தது. இதில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் வடிவேல்சாமியை தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதை கண்டித்தும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பழனியை சேர்ந்த வக்கீல்கள் சுரேந்திரன் மற்றும் ஜீவானந்தம் ஆகியோர் மீது பொய் வழக்குப்பதிவு செய்து, வக்கீல்கள் நலனுக்கு எதிராக செயல்பட்டு வரும் போலீசாரை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு நிறைவேற்றிய தீர்மானத்தின் படியும், கூட்டுக்குழு கேட்டுக்கொண்டதன்பேரில் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நேற்று பெரம்பலூர் அட்வகேட் அசோசியேசன் சார்பில் வக்கீல்கள் பெரம்பலூர், குன்னம் மற்றும் வேப்பந்தட்டையில் உள்ள அனைத்து கோர்ட்டு பணிகளையும் புறக்கணிப்பு செய்தனர். இதனால் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டன.