தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்
நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.
சென்னை,
தென்இலங்கை கடற்கரை பகுதியை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது.
குறிப்பாக நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கிய கனமழை, தற்போது வரை நீடித்து வருகிறது. தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.
இந்த தொடர் மழை காரணமாக பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் நீரின் அளவு உயர்ந்துள்ளது.
அணைகளுக்கு 10 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் நீர் திறக்கப்படும் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே தாமிரபரணி ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க நெல்லை கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.