வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு குறித்து ஆலோசனை


வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு குறித்து ஆலோசனை
x
தினத்தந்தி 2 Aug 2022 1:25 AM IST (Updated: 2 Aug 2022 1:26 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைப்பு குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது.

திண்டுக்கல்

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கியது. இதுதொடர்பாக அரசியல் கட்சியினர் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கொடைக்கானல் ஆர்.டி.ஓ. முருகேசன், தேர்தல் பிரிவு தாசில்தார் சரவணன் மற்றும் தாசில்தார்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் ஒவ்வொரு வாக்காளரும் ஆதார் விவரங்களை, வீடு, வீடாக வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். இதற்காக 6 பி படிவத்தில் விவரங்களை பூர்த்தி செய்து வழங்கலாம். இது வாக்காளர் பட்டியலில் இருக்கும் விவரங்களை உறுதி செய்து, ஒரு வாக்காளருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகள் வருவதை தவிர்த்து சரியான வாக்காளர் பட்டியலை தயாரிப்பதே இதன் நோக்கமாகும்.

ஆதார் அட்டை இல்லாதவர்கள் வருமானவரி அட்டை உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் விவரத்தை வழங்கலாம். மேலும் www.nvsp.in எனும் இணையதளம், கருடா செயலியில் ஆதார் விவரங்களை தெரிவிக்கலாம். வாக்காளரிடம் இருந்து பெறப்படும் ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக பராமரிக்கப்படும். வாக்காளர்களின் விவரத்தை வெளியிடும் போது ஆதார் விவரங்களை மறைத்து வெளியிடப்படும். எனவே வாக்காளர்கள் ஆதார் விவரங்களை தெரிவிக்கலாம் என்று கூறினார்.


Next Story