எதிர்க்கட்சியினரே பாராட்டும் அறநிலையத் துறையின் செயல்பாடுகள்!


சட்ட சபையில் ஒரு விவாதம்

கடந்த மே மாதம் சட்டசபையில் இந்து சமய அறநிலையத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தைத் தொடங்கிவைத்து அ.தி.மு.க உறுப்பினர் நத்தம் விஸ்வநாதன் பேசும்போது தி.மு.க அரசுக்கு நன்றி தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

''2002-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது. பொதுவாக, அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை முடக்குவீர்கள் அல்லது ரத்து செய்வீர்கள். ஆனால், அன்னதான திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் 11 ஆயிரம் கோவில்களில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடத்தப்பட்டுள்ளது. கோவில் திருப்பணிகளுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டதை, ரூ.50 ஆயிரமாகவும், ரூ.1 லட்சமாகவும் உயர்த்தி வழங்கியது அ.தி.மு.க. ஆட்சியில்தான்'' என்றார் அவர். அப்போது அறநிலையத் துறை பி.கே.சேகர்பாபு, ''உறுப்பினர் 2 முறை இந்த அரசுக்கு நன்றி கூறினார். அவர் பேசி முடிப்பதற்குள் 10 முறையாவது நன்றி சொல்வார் என எதிர்பார்க்கிறேன். ஏனெனில், எம்மதமும் சம்மதம் என முதல்அமைச்சர் செயல்படுகிறார். கோவில் திருப்பணிகளுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு கோவிலுக்கும் ரூ.1 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டதாக உறுப்பினர் குறிப்பிட்டார். அது தற்போது ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுவும் இப்போது இந்த நிதி 1250 கோவில்களுக்கு வழங்கப்படுகிறது'' என்றார்.

அதைத் தொடர்ந்து, ''இந்துக்களால் நேசிக்கப்படும் தலைவராக நம் முதல் அமைச்சர் உள்ளார். மடாதிபதி தலைவர்கள் எல்லாம் ஒன்றுகூடி, முதல் அமைச்சரை சந்தித்துப் பேசினார்கள். பின்னர் அவர்கள், தமிழகத்தில் ஆன்மிக ஆட்சி நடக்கிறது என்று கூறினார்கள். நம் முதல் அமைச்சர் எல்லா மதத்துக்கும் சொந்தக்காரர்'' என்றார் அமைச்சர் எ.வ.வேலு.

நிறைவாகப் பேசிய முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், ''இன்றைக்கு திட்டமிட்டே ஒருசிலர் தி.மு.க.வை ஆன்மிகத்துக்கு எதிராக இருப்பதுபோல் காட்ட முயற்சி செய்கிறார்கள். இது பெரியார் ஆட்சி, அண்ணா ஆட்சி, தலைவர் கருணாநிதி ஆட்சி. ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், இதுதான் திராவிட மாடல் ஆட்சி'' என்று தெளிவாகக் கூறினார்.

தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சியா?

பொதுவாக தி.மு.க இந்துக்களுக்கு எதிரான கட்சி என்கிற கருத்து சில எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்படுவதுண்டு. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் தி.மு.க தலைமையிலான தமிழ் நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறைச் செயல்பாடுகள் எப்படி இருந்தன?

இந்த அரசு எந்த மதத்துக்கும் எதிராகவும் செயல்படுவதில்லை; எல்லோரையும் பாரபட்சமின்றியே பார்க்கிறது என்பதற்கு உதாரணமாகவே மேற்சொன்ன சட்டசபை விவாதம் இருந்தது. எதிர்க்கட்சியினரே வேறுவழியின்றி அறநிலையத் துறையின் செயல்பாடுகளைப் பாராட்டத்தானே செய்தார்கள்?

பெரும்பாலும் இந்து சமய அறநிலையத் துறை என்பது அதிகம் வெளியில் தெரியாத துறையாகவே இருக்கும். ஆனால், தி.மு.க அரசின் முதல் ஓன்றரையாண்டு ஆட்சிக் காலத்திலேயே இந்த நிலை அப்படியே நேரெதிராக மாறியுள்ளது. 2021 மே முதல் 2022 மார்ச் வரையிலான காலகட்டத்தில் மட்டுமே 133 திருக்கோயில்களுக்கு சொந்தமான 720.83 ஏக்கர்நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கோயில்களில் அன்னதானம், அர்ச்சகர்கள் நியமனம் எனப் பரவலாக பல திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆலயம் தோறும் கல்விச்சாலைகள்!

இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது, 1,500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் உள்ள 10 கோயில்களின் நிதியில் இருந்து 150 கோடி ரூபாய் மதிப்பில் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை செயல்படுத்தும் விதமாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பாக கொளத்தூரிலும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் சார்பில் பரமத்திவேலூரிலும், திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி கோயில் சார்பில் தொப்பம்பட்டியிலும், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் சார்பில் விளாத்திக்குளத்திலும் என்று 4 இடங்களில் புதிதாக கல்லூரிகள் தொடங்குவதற்கு தமிழ் நாடு அரசு உயர்கல்வித்துறை அரசாணை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளிப்படைத் தன்மை

கோயில் குறித்த புகார்களுக்காகவே `கோரிக்கையைப் பதிவிடுக' எனும் தி.மு.க-வின் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. துறை சார்ந்த நடவடிக்கைகளில் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்கப்பட அறநிலையத் துறையின் சார்பில் 'கோரிக்கையைப் பதிவிடுக' எனும் புதிய இணையவழித் திட்டத்தை உருவாக்கப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையிலுள்ள 'கோரிக்கையைப் பதிவிடுக' எனும் திட்டம் பலராலும் வரவேற்கப்படுகிறது.

கோயில் சொத்துக்களை நிர்வகிப்பது, கோயில் பராமரிப்பு, கட்டண தரிசனம் குறித்த புகார்கள், பழைமை வாய்ந்த கோயில்கள் புனரமைக்கப்படாத நிலை எனப் பல்வேறு பிரச்னைகளை பக்தர்களும் ஆன்மிக அமைப்புகள் எழுப்பிவருகின்றன.

2021 மே 19 அன்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துறைசார்ந்த அதிகாரிகளை சந்தித்துப் பேசியதோடு, கோயில்களின் சொத்துவிவரங்களை இணையத்தில் வெளியிட அறிவுறுத்தினார். இந்த அறிக்கை அனைவராலும் வரவேற்கப்பட்டது. இந்த நிலையில்தான் சேகர்பாபு 2021 மே 21 அன்று சேகர்பாபு புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் துறை சார்ந்த நடவடிக்கைகள் அனைத்திலும் வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருப்பதாகவும், அதன் ஒருபகுதியாக அறநிலையத் துறையின் சார்பில் 'கோரிக்கையைப் பதிவிடுக' என்னும் ஒரு புதிய இணையவழித் திட்டம் ஒன்றை உருவாக்கியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கோயில் சார்ந்த புகார்களை மக்களிடம் பெறுவதற்காக இந்து அறநிலையத் துறை உருவாக்கியிருக்கும் வசதியே 'கோரிக்கையைப் பதிவிடுக.' இந்து அறநிலையத்துறையின் இணைய தளத்தில் ( https://hrce.tn.gov.in/hrcehome/index.php ) இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது.

கோயில்கள் சார்ந்த புகார்கள் மற்றும் கோரிக்கைகளை 500 வார்த்தைகளுக்கு மிகாமல் பதிவிடலாம். கோரிக்கை அல்லது புகார்களுக்கு ஆதாரமான கோப்புகளை இணைக்கும் வசதியும் தரப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம், புகார் பதிவானதும் உடனடியாக பதிவு செய்தவரின் தொலைபேசி எண்ணுக்குப் புகார் பதிவு எண் போய்விடும். அந்தப் புகார் உடனடியாக சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பபட்டு 60 நாள்களுக்குள் தீர்வு காணப்படும்.

அறுபது நாள்களுக்குப் பின் பதிவிட்டவர் தன் புகார் பதிவு எண்ணைக் குறிப்பிட்டு அந்தப் புகாரின் நிலையை அறிந்துகொள்ளலாம். இது பயன்படுத்த எளிதாகவும் அனைவரும் பதிவிட வசதியாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயல்பாடு திருக்கோயில்களை மேம்படுத்த உதவும்.

கோரிக்கைகளின் மீதான நடவடிக்கைகள் இந்துசமய அறநிலையத்துறை ஆணையரின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும். அதுமட்டுமன்றி கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அமைச்சரின் நேரடி கவனத்துக்கும் சென்று ஆய்வு மேற்கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூடுதல் கட்டிடங்கள்

2021-22ஆம் ஆண்டிற்கான இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை மானியக் கோரிக்கையின்போது, ஆணையர் அலுவலக வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் ரூ. 15 கோடி செலவில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பின்படி, ஆணையர் அலுவலக வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளை தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2022 ஏப்ரல் 25 அன்று தொடங்கி வைத்தார்.

இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 44,000-க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் இயங்கி வருகின்றன. 4 கூடுதல் ஆணையர்கள், 35 இணை ஆணையர்கள், 30 துணை ஆணையர்கள், 77 உதவி ஆணையர்கள், கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், நகை சரிபார்ப்பு அலுவலர்கள் ஆகிய 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்களை கொண்டு திருக்கோயில் நிர்வாகம் நிர்வகிக்கப்படுகிறது. தலைமையிட அலுவலக இடப்பற்றாக்குறையைக் களைவதற்காக ஆணையர் அலுவலக வளாகம் விரிவுப்படுத்தப்படுகிறது.

புதியதாக அமையவுள்ள கூடுதல் கட்டிடம் 39,913 சதுரடியில் 4 தளங்களுடன் அமையவுள்ளது. இதில் திருக்கோயிலின் புத்தக விற்பனை நிலையம், வரவேற்பறை, உதவி ஆணையர்கள் அறை, மாவட்ட வருவாய் அலுவலர்கள் அறை, அலுவலர்கள் அறை பொறியாளர்கள் அறை, வாகன நிறுத்துமிடம் மற்றும் உணவகம் என நவீன வசதிகளுடன் கூடுதல் கட்டிடம் அமையவுள்ளது.

புதிய கட்டுமானங்கள்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 13 திருக்கோயில்களில் ரூ.56.18 கோடி மதிப்பீட்டிலான 16 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 19 புதிய வாகனங்களை வழங்கினார்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 56 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 13 திருக்கோயில்களில் ராஜகோபுரங்கள், மகா மண்டபம், திருமண மண்டபங்கள், அர்ச்சகர் மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு, வணிக வளாகம், மலைப் பாதை சீரமைத்தல், மதிற்சுவர் கட்டுதல், ஒருங்கிணைந்த மண்டல இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் அலுவலகங்கள் கட்டுதல் போன்ற 16 புதிய திட்டப் பணிகளுக்கான கட்டுமானப் பணிகளை முதல் அமைச்சர் தொடங்கி வைத்தார்.

புதிய வாகனங்கள்

இந்து சமய அறநிலையத்துறையின் 2021-22ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், 'துறை அலுவலர்கள் பயன்பாட்டிற்கு 108 புதிய ஊர்திகள் ரூ.8 கோடி செலவில் கொள்முதல் செய்யப்படும்' என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் கட்டடங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டல், திருக்கோயில்களுக்கு சொந்தமான அசையா சொத்துகளை கண்டறிந்து அளவீடு செய்தல், திருக்கோயில்களின் திருப்பணிகளை பார்வையிட்டு விரைந்து பணிகளை முடிக்க செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு வாகன வசதிகள் ஏற்படுத்தி தரும் வகையில், முதற்கட்டமாக 5 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் 69 புதிய வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, 4.4.2022 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அலுவலர்களின் பயன்பாட்டுக்காக வாகனங்கள் வழங்கப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டமாக 1 கோடியே 56 இலட்சத்து 41 ஆயிரத்து 237 ரூபாய் செலவில் 19 புதிய வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்களின் பயன்பாட்டுக்காக முதல் அமைச்சர் முன்னிலையில் வழங்கப்பட்டன.

தொடரும் ஆன்மிகப் பணிகள்

இந்து சமய அறநிலையத்துறை வாயிலாக திருக்கோயில்களின் வளர்ச்சிக்கான திட்டங்களையும், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளையும் தி.மு.க. தலைமையிலான தமிழ் நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற வரலாற்று சிறப்புமிக்க திட்டம், ரூ.2600 கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு, மூன்று திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்பதற்கு 38 மாவட்டங்களில் வட்டாட்சியர்கள் உள்பட 108 பணியிடங்களை உருவாக்கியது, தமிழகத்தில் உள்ள முக்கிய திருக்கோயில்களின் அன்றாட நிகழ்வுகளை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை தலைமையிடத்தில் திறக்கப்பட்டது போன்ற பல்வேறு திட்டங்களை சீரும் சிறப்புமாகச் செயல்படுத்தி வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை மூலம் 400-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு, தொன்மை வாய்ந்த திருக்கோயில்களில் திருப்பணிகள், திருத்தேர்களை பழுதுபார்த்து வீதிஉலா, திருக்குளங்களை புனரமைத்தல், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருவதுடன், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளும் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

இதுதான் கொள்கை!

கலைஞர் வசனம் எழுதிய 'பராசக்தி' திரைப்படத்தில் குறிப்பிட்டதுபோல், 'ஆலயங்கள் கூடாது என்பதல்ல; ஆலயங்கள் கொடியவர்களின் கூடாரமாக ஆகக்கூடாது' என்பதுதான் தி.மு.க.வின் கொள்கை. அதை மனதில்கொண்டு, இந்து சமய அறநிலையத் துறையின் வாயிலாக அற்புதமான பல அறப்பணிகளையும் நலப்பணிகளையும் மேற்கொண்டு வருகிறது தமிழ் நாடு அரசு.

திமு.க. தலைமையிலான தமிழ் நாடு அரசின் அறநிலையத் துறை பணிகள்

* 2021-2022 ஆம் ஆண்டு முதல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, திருத்தணிகை, சமயபுரம், திருச்செந்தூர் ஆகிய மூன்று திருக்கோயில்களிலும் நாள் முழுதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

* பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள நற்பண்புகள், நீதிநெறி கருத்துக்களை கதைகள் வாயிலாக குழந்தைகளின் மனதில் ஆழப்பதிந்திட,ஆன்மிக மற்றும் நீதிநெறி வகுப்புகள், முக்கிய திருக்கோயில்கள் அனைத்திலும் நடத்தப்பட்டு வருகின்றன.

* தொன்றுதொட்டு மரங்கள் இறைவன்/இறைவியை குறிக்கும் சின்னங்களாகவும், பல்வேறு பூஜைகளின் அங்கமாக விளங்குகின்றன. ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் ஒரு குறிப்பிட்ட மரம் புனிதமாக தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களை நினைவுகூறும் வகையில் திருக்கோயில்களில் ஒரு இலட்சம் தலமரக்கன்றுகளை மாநிலம் முழுவதும் உள்ள திருக்கோயில் வளாகத்தில் நடும் கலைஞர் தலமரக்கன்றுகள் நடும் திட்டம் 07.08.2021 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்தில் நாகலிங்க மரக்கன்றினை நட்டு துவக்கி வைக்கப்பட்டது.

* நிதி வசதியற்று, ஒரு கால பூஜை கூடச் செய்திட இயலாத நிலையிலுள்ள திருக்கோயில்களுக்கு, நாள்தோறும் ஒரு கால பூஜை செய்வதற்கான சிறப்புத் திட்டத்துக்கன மூலதன நிதியினை இரட்டிப்பாக்கி ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதற்காக நடப்பாண்டில் ரூ.130 கோடி அ ரசு மானியமும் வழங்கப்படுகிறது.

* அன்னைத் தமிழில் அர்ச்சனை

தமிழ் அருளாளர்கள் இறைவனை தமிழில் போற்றி பாடியுள்ளனர். அருளாளர்கள் அருளிய திருமந்திரம், தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரபந்தம், திருப்புகழ் போன்றவைதமிழ் மொழியின் சிறப்பினை எடுத்துரைத்தது மட்டுமல்லாமல் தமிழின் வளர்ச்சிக்கும், தங்களது பங்களிப்பை அளித்துள்ளன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அன்னைத் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற அறிவிப்பு பதாகையினை வெளியிட்டார். இத்திட்டம் முதற்கட்டமாக 47 முதுநிலை திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் அர்ச்சனை நூல்கள் கிடைக்கச் செய்து இவ்வரசு அன்னைத்தமிழில் அர்ச்சனை திட்டத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளது. அருள்மிகு விநாயகர் போற்றி, அருள்மிகு முருகவேள் போற்றி, அருள்மிகு உமையம்மை போற்றி, அருள்மிகு நடராசர் போற்றி, அருள்மிகு தென்முக கடவுள் போற்றி, அருள்மிகு கோதண்டராமர் போற்றி, அருள்மிகு தாயார் போற்றி, அருள்மிகு துர்க்கையம்மன் போற்றி, அருள்மிகு காளியம்மன் போற்றி, அருள்மிகு மாரியம்மன் போற்றி, அருள்மிகு அனுமன் போற்றி ஆகிய 108 போற்றிகள் அடங்கிய நூல்களும்,1008 போற்றிகள்அடங்கிய அருள்மிகு சிவன் போற்றி நூலும், ஆக 12 போற்றி நூல்களும் திருக்கோயில்கள் அனைத்திலும் கிடைக்கச் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் 12.08.2021 அன்று தொடங்கி வைத்தார். மேலும் இரண்டு போற்றி நூல்களான அருள்மிகு திருமால் போற்றி மற்றும் அருள்மிகு நவகோள்கள் போற்றி ஆகியனவும் வெளியிடப்பட்டுள்ளன.

* அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பணி நியமனம்

வழிபாடு செய்பவர் அனைவரும் இறைவனைத் துதிக்கவும், சடங்குகள் செய்யவும், போற்றி வழிபடவும், திருக்கோயில்களில் சமூக நீதியை நிலைநாட்டும் விதத்தில், இந்து சமயத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் தகுதியான மற்றும் தேவையான பயிற்சி பெற்றோரை அர்ச்சகர்களாக நியமித்திட அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், மதுரை, பழநி, திருச்செந்தூர், திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர்ளுக்கான பயிற்சி நிலையங்களும், சென்னை, ஸ்ரீரங்கம் ஆகிய இரண்டு இடங்களில்வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும்ஏற்படுத்தப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 14.08.2021 அன்று 56 அர்ச்சகர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அவர்களுள் 22 அர்ச்சகர்கள் மேற்கூறிய பயிற்சி நிலையங்களில் பயிற்சியினை நிறைவு செய்தவர்கள் ஆவர்