சாக்லெட் கொடுத்து ஏமாற்றி குழந்தைகளிடம் நகை பறித்த சாகச பெண் கைது - தியாகராயநகரில் பரபரப்பு
குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்து ஏமாற்றி நகை திருடிய சாகச பெண் கைது செய்யப்பட்டார்.
சென்னை தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் உள்ள குறிப்பிட்ட 2 துணிக்கடைகளுக்கு பெற்றோருடன் வரும் குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்து ஏமாற்றி, அந்த குழந்தைகள் அணிந்திருந்த நகைகளை மர்ம நபர் ஒருவர் நைசாக திருடிய சம்பவங்கள் அடிக்கடி நடந்தது. இது தொடர்பாக மாம்பலம் போலீஸ் நிலையத்தில் 3 புகார்கள் கொடுக்கப்பட்டது.
ஆவடியைச் சேர்ந்த ரேவதி, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஜெகன், மாங்காட்டில் வசிக்கும் தமிழ்ச்செல்வி ஆகிய 3 பேர் தங்களது குழந்தைகள் கழுத்தில் கிடந்த நகைகளை பறிகொடுத்து விட்டதாக புகாரில் தெரிவித்து இருந்தனர். மொத்தம் 3 புகார்களிலும் சேர்த்து, சுமார் 5 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்தது.
பெண் ஒருவர், சாக்லெட் கொடுத்து தங்கள் குழந்தைகளிடம் பேசிக்கொண்டிருந்ததாகவும், அந்த பெண் மீது சந்தேகம் இருப்பதாகவும், புகாரில் கூறப்பட்டிருந்தது. இது தொடர்பாக மாம்பலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
குறிப்பிட்ட துணிக்கடைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, குழந்தைகளிடம் அன்பாக பேசிக்கொண்டிருந்த பெண் ஒருவர், நைசாக குழந்தைகள் கழுத்தில் கிடந்த நகைகளை திருடுவது பதிவாகி இருந்தது.
குறிப்பிட்ட சாகச பெண்ணை பொறி வைத்து பிடிக்க மாம்பலம் போலீசார் மாறுவேடத்தில் குறிப்பிட்ட துணிக்கடைகளில் கண்காணித்து வந்தனர். நேற்று முன்தினம் குறிப்பிட்ட பெண்ணை மாறு வேட போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
அந்த பெண்ணின் பெயர் தபு (வயது 37). சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர். கணவரை பிரிந்து வாழும் அவர், ஒரு குழந்தைக்கு தாய். வயிற்று பிழைப்புக்காக திருட்டு தொழிலில் ஈடுபட்டதாக அந்த பெண் தெரிவித்தார். குழந்தைகளிடம் திருடிய நகைகள் மீட்கப்பட்டது. கைதான தபு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.