மேற்கு மாம்பலத்தில் துணிகரம்: மத்திய அரசு ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை போனது. பிளம்பர் போர்வையில் திருடிச்சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை மேற்கு மாம்பலம் ராஜூ தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் வெங்கட சுப்பிரமணியன். ஓய்வுபெற்ற தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி பத்மாவதி (வயது 62). மத்திய அரசின் இ.எஸ்.ஐ. அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இந்த வயதான தம்பதிக்கு மாம்பலம் கணபதி தெருவிலும் சொந்தமாக வீடுஉள்ளது. அந்த வீட்டில் பிளம்பிங் வேலைக்காக பிளம்பரை வரச் சொல்லி இருக்கிறேன் என்று பத்மாவதியிடம் கூறிவிட்டு வெங்கட சுப்பிரமணியன் வெளியே சென்றுவிட்டார்.
பத்மாவதிக்கு காது கேட்கும் திறன் குறைவாக இருந்துள்ளது. எனவே அவர் தற்போது வசிக்கும் வீட்டுக்குதான் பிளம்பர் வருவார் என்று கருதி உள்ளார். இந்த சமயத்தில் வாலிபர் ஒருவர் அவரது வீட்டுக்கு வந்தார். அவரிடம், 'பிளம்பிங் வேலைக்காக தனது கணவர் அனுப்பிய பிளம்பர் நீங்கள் தானே?' என்று கேட்டார். அந்த நபரும் உடனடியாக தலையை ஆட்டினார்.
பின்னர் அந்த வாலிபர், வீட்டுக்குள் சென்று ஒவ்வொரு அறையையும் சுற்றி பார்த்தார். படுக்கை அறை கதவு பழுதடைந்துள்ளது. அதனை சரி செய்வதற்கு கருவிகளை எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.
அவர் சென்ற சிறிது நேரத்தில் பத்மாவதி படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது பீரோ கதவு திறக்கப்பட்டிருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த 40 பவுன் தங்க நகைகள் மாயமாகி இருந்தது.
இது குறித்து அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் வெங்கட சுப்பிரமணியன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் சிக்கிய காட்சிகள் அடிப்படையில் பிளம்பர் போர்வையில் வந்து 40 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.