அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும்
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும் என ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வேலூர் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் கந்தனேரியில் உள்ள மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஹேமந்த்குமார் தலைமை தாங்கினார். துணை செயலாளர் ரித்தீஷ் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன், வேலூர்மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனி சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய செயலாளர்கள், கிளை செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வேலழகன் பேசியதாவது:-
அ.தி.மு.க.வில் 16 பிரிவுகள் உள்ளன. அதில் முக்கிய பிரிவாக தகவல் தொழில்நுட்ப பிரிவையே எடப்பாடி பழனிசாமி முன்னிறுத்தி வருகிறார். தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் சிறப்பாக பணியாற்றி நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை வெற்றி பெறச்செய்து எடப்பாடி பழனிசாமியை ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டும் என்றார்.
அதைத்தொடர்ந்து தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனீ சதீஷ்குமார் பேசுகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும். தேர்தல் வெற்றிக்கு தகவல் தொழில்நுட்ப பிரிவின் பணியே காரணமாக இருக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட பிற அணி செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள் பாபுஜி, ஆனந்தன், இளைஞரணி செயலாளர் சேரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.