ஆகஸ்டு 20-ந் தேதி வரை கட்சி அலுவலகத்துக்கு தொண்டர்கள் வரவேண்டாம் அ.தி.மு.க. அறிவிப்பு பலகை


ஆகஸ்டு 20-ந் தேதி வரை கட்சி அலுவலகத்துக்கு தொண்டர்கள் வரவேண்டாம் அ.தி.மு.க. அறிவிப்பு பலகை
x

ஆகஸ்டு 20-ந் தேதி வரை அ.தி.மு.க. தொண்டர்கள், ஆதரவாளர்கள் வர வேண்டாம் என அ.தி.மு.க. தலைமை அலுவலக நுழைவு வாயிலில் நேற்று திடீரென அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் கடந்த 11-ந் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் வேளையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்று கட்சி அலுவலகத்தை கைப்பற்ற முயற்சித்தார்.

ஆனால், அங்கு இருந்த எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை தடுக்க முயற்சித்தனர். இதனால், இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் கற்களை வீசி மோதலில் ஈடுபட்டனர். இதனால், அந்த பகுதி கலவரக் களமானது. இதையடுத்து, வருவாய்த்துறை அதிகாரிகள் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு 'சீல்' வைத்தனர். இதனால், அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்குள் இருதரப்பினரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

ஐகோர்ட்டு தீர்ப்பு

உடனடியாக, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சார்பில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் தனித்தனியே வழக்கு தொடரப்பட்டது. இருதரப்பினரின் மனுவையும் ஏற்றுக்கொண்டு விசாரணை நடத்திய சென்னை ஐகோர்ட்டு கடந்த 20-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில், ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கையை நிராகரித்ததுடன், எடப்பாடி பழனிசாமியிடம் அ.தி.மு.க. தலைமை அலுவலக சாவியை வழங்க வேண்டும் என்றும், அ.தி.மு.க. அலுவலகத்துக்கு காவல்துறையினர் 24 மணி நேரமும் முழு நேர பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், ஒரு மாத காலத்திற்கு கட்சி தலைமை அலுவலகத்திற்குள் அ.தி.மு.க. தொண்டர்களையோ, ஆதரவாளர்களையோ எடப்பாடி பழனிசாமி அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டது.

சாவி ஒப்படைப்பு

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் வருவாய்துறை அதிகாரிகள் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்து தாங்கள் வைத்த சீலை அகற்றியதுடன், சாவியை அ.தி.மு.க. அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் வழங்கினர்.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவை மதிக்கும் வகையில், ஒரு மாத காலத்துக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு வருகை தர வேண்டாம் என்று அலுவலகத்தின் நுழைவு வாயிலின் இருபுறமும் அ.தி.மு.க. தலைமை கழகம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதுடன், அலுவலக நுழைவு வாயில் பூட்டுப்போட்டு பூட்டப்பட்டுள்ளது.

அறிவிப்பு பலகை

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அந்த அறிவிப்பு பலகையில், "நீதிமன்ற ஆணைப்படி கழக தொண்டர்களும், ஆதரவாளர்களும் 20.8.2022 வரை தலைமை கழகத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இப்படிக்கு, தலைமை கழகம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.மாளிகை, அனைத்திந்திய அண்ணா தி.மு.கழகம்" என்று கூறப்பட்டுள்ளது.


Next Story