துரோகிகளை வீழ்த்தி...! தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க.ஆட்சி...! தர்மபுரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


துரோகிகளை வீழ்த்தி...!  தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க.ஆட்சி...!  தர்மபுரியில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 9 Aug 2022 2:15 PM IST (Updated: 9 Aug 2022 5:05 PM IST)
t-max-icont-min-icon

எதிரிகளையும்,துரோகிகளையும் வீழ்த்தி தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை அமைப்போம் என்று தர்மபுரியில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தர்மபுரி

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை தர்மபுரி வந்தார். அவருக்கு தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தர்மபுரி அரசு மருத்துவமனை முன்பு முன்னாள் அமைச்சரும், கட்சியின் அமைப்பு செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமி அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களிடையே பேசியதாவது:-

அ.தி.மு.க. ஒரு போதும் அழிக்க முடியாத வலிமையான இயக்கம் என்பதற்கு இங்கு குழுமியுள்ள நிர்வாகிகள், தொண்டர்கள் கூட்டமே சான்று. அ.தி.மு.க.வை உடைக்க சில துரோகிகள் மு.க.ஸ்டாலின் அரசு ஆதரவுடன் இணைந்து முயற்சி செய்கிறார்கள். அவர்களுக்கு உங்கள் மூலம் தக்க பாடம் கற்பிக்கப்படும். அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் மீது திட்டமிட்டு பொய் வழக்குகள் போடப்படுகின்றன. அவற்றை எதிர்கொண்டு முறியடிக்கும் தெம்பையும், திராணியையும், எம்.ஜி.ஆ.ரும் ஜெயலலிதாவும் நமக்கு வழங்கிச் சென்று இருக்கிறார்கள்.

தர்மபுரி மாவட்டம் அ.தி.மு.க.வின் எகு கோட்டை. கடந்த சட்டமன்ற தேர்தலில் இங்குள்ள 5 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வென்றது. தர்மபுரியை போல் தமிழகத்தின் வேறு பகுதிகளில் நமக்கு வெற்றி கிடைத்து இருந்தால் அ.தி.மு.க. ஆட்சி அமைந்திருக்கும். சில துரோகிகள் நம்மிடம் இருந்து கொண்டே குந்தகம் விளைவித்தார்கள்.

இப்போது யார்? துரோகி என்பதை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உணர்ந்து விட்டனர். எத்தனை சோதனைகள் வந்தாலும் அவற்றை படிக்கட்டாக மாற்றி எதிரிகளையும், துரோகிகளையும் வீழ்த்தி மீண்டும் அ.தி.மு.க.ஆட்சியை அமைக்க பாடுபடுவோம்.

தர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர்.,ஜெயலலிதா ஆட்சி காலங்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

நமது ஆட்சியில் கொண்டுவரப்பட்ட எண்ணேகொல்புதூர்- தும்பலள்ளி கால்வாய் திட்டத்தை தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுள்ளது. ஆமை வேடத்தில் உள்ள பிற நீர்ப்பாசன திட்டப் பணிகளை விரைவு படுத்த வேண்டும். ஒகேனக்கல் காவிரி ஆற்றின் உபரி நீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த நமது ஆட்சியில் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்த உடன் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டது. போதைப் பொருட்கள் தாராளமாக எங்கும் கிடைக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தால் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்து விட்டன. பலர் உயிரை மாய்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை அரசு தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

இந்த வரவேற்பு கூட்டத்தில் கட்சியின் அமைப்பு செயலாளர் கே.சிங்காரம், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாநில விவசாய பிரிவு தலைவர் டி ஆர். அன்பழகன், மாநில இளைஞர் பாசறை இணைச் செயலாளர் கே.பி. ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story