காந்தி சிலையை அகற்ற அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு
குளித்தலை பஸ்நிலையத்தில் உள்ள காந்தி சிலையை அகற்ற அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி ஆணையரிடம் மனு ெகாடுத்தனர்.
இடமாற்றம் செய்யக்கூடாது
குளித்தலை அ.தி.மு.க. நகரசெயலாளர் மணிகண்டன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் நேற்று குளித்தலை நகராட்சி ஆணையர் நந்தகுமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
குளித்தலை பஸ் நிலையத்தை மேம்படுத்தும் பணி பொருட்டு பஸ் நிலையம் அருகில் உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்வது தொடர்பாக குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஏற்கனவே அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. கூட்டத்தில் காந்தி சிலையை இடமாற்றம் செய்யக்கூடாது என அ.தி.மு.க. சார்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே இச்சிலையை இடமாற்றம் செய்வது தொடர்பாக மறுப்பு தெரிவித்த காரணத்தால் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்த கூட்டத்தை அ.தி.மு.க. புறக்கணித்தது. எனவே காந்தி சிலையை இருக்கும் இடத்தில் இருந்து அகற்றக்கூடாது.
வாகன ஓட்டிகள் சிரமம்
அதுபோல குளித்தலை நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக சாலை பறிக்கப்பட்டு முதற்கட்ட பணி ஏறக்குறைய நிறைவேற்றப்பட்டுள்ளது. சாலை பறிக்கப்பட்டு உள்ள அனைத்து பகுதிகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே குழாய் அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் சிரமம் இன்றி பயணிக்கும் வகையில் அனைத்து பகுதிகளிலும் சாலை அமைக்க துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.