அ.தி.மு.க. உண்ணாவிரதத்துக்கு போலீஸ் அனுமதி மறுப்பு
என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று(திங்கட்கிழமை) நடைபெற இருந்த உண்ணாவிரதத்துக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதை அடுத்து சட்ட மன்ற அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்
சேத்தியாத்தோப்பு
வாய்க்கால் வெட்டும் பணி
நெய்வேலி என்.எல்.சி. நிறுவனம் 2-வது சுரங்க விரிவாக்க பணிக்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி, கத்தாழை, கரிவெட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி வாய்க்கால் மற்றும் சாலை அமைக்கும் பணி கடந்த 26-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதற்கு பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணியை என்.எல்.சி. நிறுவனம் கைவிடக்கோரி பா.ம.க. சார்பில் கடந்த 28-ந் தேதி நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இது தொடர்பாக 30 பேரை போலீசார் கைது செய்தனர். இதன் பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் வளையமாதேவி பகுதியில் வாய்க்கால் வெட்டும் பணி மற்றும் சாலை அமைக்கும் பணியை என்.எல்.சி.நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
உண்ணாவிரதம்
இதற்கிடையே விவசாயிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றும்வரை நிலத்தை வெட்டி எடுக்கும் பணியை என்.எல்.சி.நிறுவனம் நிறுத்த வேண்டும். இல்லை என்றால் போராட்டம் நடைபெறும் என அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. அறிவித்து இருந்தார்.
ஆனால் வாய்க்கால் வெட்டும் பணி தொடர்ந்து நடைபெற்றதால் என்.எல்.சி.க்காக வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வளையமாதேவி கிராமத்தில் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. தலைமையில் இன்று(திங்கட்கிழமை) உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அனுமதி மறுப்பு
இதற்காக அனுமதி கேட்டு புவனகிரி ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் மற்றும் கட்சி நிர்வாகிகள் சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை மனு கொடுத்தனர். ஆனால் இதற்கு அனுமதி மறுத்ததாக தெரிகிறது.
இது குறித்து சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார் தலைமையில் பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. இதில் அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., ஜெயலலிதா பேரவை செயலாளர் கானூர் பாலசுந்தரம், முருகுமணி, ஒன்றிய செயலாளர்கள் எஸ்.பி.கருப்பன், முனுசாமி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அப்போது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை காரணமாக உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன்குமார் தெரிவித்தார்.
சட்டமன்ற அலுவலகத்தில்
இதையடுத்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தகவலை தெரிவித்து, அவரது அனுமதியை பெற்று புவனகிரி சட்டமன்ற அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதனால் தடையை மீறி போராட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கருதப்படுவதால் நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, வளையமாதேவி மற்றும் புவனகிரி பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நெய்வேலியில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது.