நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
மேல்மா சிப்காட் விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்யாறு
மேல்மா சிப்காட் விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதை எதிர்த்து அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற்பேட்டைக்கு, மேல்மா பகுதியை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 3 ஆயிரத்து 174 ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு பணிகளை மேற்கொண்டு வருகின்றதது. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்கள் விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதன்படி திருவண்ணாமலை வடக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் தூசி கே.மோகன் தலைமையில் மேல்மா கூட்ரோட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் என்.சுப்பிரமணியன், சேவூர் ராமச்சந்திரன் மற்றும் வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் பாபுமுருகவேல் ஆகியோர் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசை கண்டித்து பேசினர்.ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.