அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது மேலும் ஒரு வழக்கு


அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது மேலும் ஒரு வழக்கு
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம்

விழுப்புரம்:

வானூர் தாலுகா ஆரோவில் பஸ் நிலையம் எதிரே கடந்த 10.3.2023 அன்று அ.தி.மு.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அக்கட்சியின் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி. கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், தமிழக அரசையும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் வகையில் தரக்குறைவாகவும், அவதூறாகவும் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அரசு வக்கீல் டி.எஸ்.சுப்பிரமணியம் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கின் விசாரணை அடுத்த மாதம் (அக்டோபர்) 9-ந் தேதி நடைபெறும் என்றும், அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட சி.வி.சண்முகம் நேரில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டார்.

ஏற்கனவே செஞ்சி நாட்டார்மங்கலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை பற்றி அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்ட நிலையில் தற்போது அவர் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story