எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - 2 கோடி உறுப்பினர் சேர்க்கை, மதுரை மாநாடு குறித்து ஆலோசனை


எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - 2 கோடி உறுப்பினர் சேர்க்கை, மதுரை மாநாடு குறித்து ஆலோசனை
x

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடந்தது. இதில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கை, மதுரை மாநாடு பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நேற்று மாலை நடந்தது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினார். இதில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், அமைப்பு செயலாளர் தங்கமணி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களின் பதிவை புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்த்தலுக்கான பணிகளை துரிதப்படுத்துதல், மதுரையில் ஆகஸ்டு 20-ந் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாட்டை பொன்விழா மாநாடாக எழுச்சியுடன் நடத்துவது, 2 கோடி உறுப்பினர்கள் நிலைக்கான மாவட்ட செயலாளர்கள் மேற்கொண்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ளது. எனவே பூத் கமிட்டி அமைத்தல், மகளிர் குழு உருவாக்குதல், இளைஞர்கள் பாசறையை வலுப்படுத்துதல் போன்ற பணிகளிலும் மாவட்ட செயலாளர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டும்.

தி.மு.க.வின் அத்துமீறல்கள், முறைகேடுகளை குறிப்பாக அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசி வெளியாகி உள்ள ரூ.30 ஆயிரம் கோடி முறைகேடு 'ஆடியோ' பதிவை தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சென்று மக்களிடையே பரப்ப வேண்டும்.

மதுரையில் ஆகஸ்டு மாதம் நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தின் நிறைவில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசின் கொள்கை விளக்க குறிப்பில் கள்ளச்சாராய வியாபாரிகள் எத்தனை பேர் கைது? எத்தனை பேர் குண்டர் சட்டத்தில் கைது? என்ற விவரமெல்லாம் அதில் இருக்கும். ஆனால் கள்ளச்சாராயம், போதை மருந்துகள் நடமாட்டம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விகளுக்கு, முதல்-அமைச்சரின் பதில் எதுவும் கொள்கை விளக்க குறிப்பில் இடம்பெறவில்லை.

ஆனால் கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கையில் 55 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், 760 பேர் மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பாய்ந்திருப்பதாகவும் இப்போது டி.ஜி.பி. சைலேந்திரபாபு சொல்கிறார். இதனை ஏன் அரசின் கொள்கை விளக்க குறிப்பில் குறிப்பிடவில்லை. இதற்கு என்ன காரணம்? என்று முதல்-அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.

முதல்-அமைச்சர் பதிலுரையில் இடம்பெற வேண்டிய தகவலை, காலம்தாழ்த்தி அதுவும் டி.ஜி.பி. சொல்கிறார் என்றால் சட்டமன்ற மாண்பு தவறாக அரங்கேற்றப்பட்டு இருக்கிறது. எனவே எதிர்க்கட்சி தலைவர் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடாது என்பதற்காக இந்த தகவல் மறைக்கப்பட்டதா? என்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்.

சட்டமன்றத்துக்கு தவறான தகவல் அளிப்பதும், உண்மையான தகவலை மறைப்பதும் குற்றம்தான். இது உரிமை மீறலும்கூட. இதை சுலபமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த விவகாரத்தில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியும் கேள்வி எழுப்பி உள்ளார். எனவே உரிய பதிலை எதிர்பார்க்கிறோம்.

அ.தி.மு.க. காலத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சவே வியாபாரிகள் பயந்தார்கள். இப்போதைய ஆட்சியில் அந்த பயம் யாருக்குமே இல்லையே... தற்போது கள்ளச்சாராய விவகாரத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதை திசைதிருப்பவே அனைவரும் முயற்சி செய்கிறார்கள்.

அ.தி.மு.க. ஆட்சியில் தவறு செய்தவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்கும். கட்சிக்காரர்களாக இருந்தால் கட்சி பதவியும் பறிக்கப்படும். இதை மக்களும் பாராட்டினார்கள்.

ஆனால் இப்போது அப்படியா... தி.மு.க.வினர் எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? சொல்லமுடியுமா? ஏதாவது பேசிவிட்டால் போதும் வழக்கு போட்டு மிரட்ட பார்க்கிறார்கள். வழக்குக்குக்கெல்லாம் அஞ்சாத இயக்கம் அ.தி.மு.க.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story