திருவண்ணாமலை நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க. வார்டு கவுன்சிலர்கள் வெளிநடப்பு


பராமரிப்பின்றி இருக்கும் பூங்காக்களில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக கூறி திருவண்ணாமலை நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. வார்டு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை

பராமரிப்பின்றி இருக்கும் பூங்காக்களில் சமூக விரோத செயல்கள் நடப்பதாக கூறி திருவண்ணாமலை நடைபெற்ற நகர மன்ற கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. வார்டு கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நகர மன்ற கூட்டம்

திருவண்ணாமலை நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகர மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ராஜாங்கம் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையர் முருகேசன் வரவேற்றார். இதில் நகர மன்ற கவுன்சிலர்கள் கலந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அப்போது அ.தி.மு.க.கவுன்சிலர்கள் கூறுகையில், ''திருவண்ணாமலை நகராட்சி பகுதியில பல்வேறு வார்டுகளுக்கு 5 நாட்களுக்கு அல்லது 7 நாட்களுக்கு ஒரு நாள் என்ற அடிப்படையில் தான் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. குறைந்தது ஒரு நாள் விட்டு ஒரு நாளாவது குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. அதனால் சாலைகளை சீர் செய்து தர வேண்டும்.

வார்டு கவுன்சிலர்களை மக்கள் பிரதிநிதிகள் என்ற முறையில் நகராட்சி பகுதியில் அரசு விழா நடைபெறும் போது அழைப்பு விடுக்க வேண்டும். திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள 39 வார்டுகளிலும் சரிவர கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளது. மேலும் துப்புரவு பணியாளருக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளதால் அவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர். எனவே அவர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கஞ்சா அதிகரித்து விட்டது

நகராட்சி பகுதியில் பராமரிப்பின்றி இருக்கும் பூங்காக்களிலும், புதர் மண்டி காலியாக உள்ள நகராட்சி இடங்களிலும் சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றது. இதனால் திருவண்ணாமலை நகரப் பகுதியில் கஞ்சா பயன்பாடு அதிகரித்து விட்டது'' என குற்றம் சாட்டினர்.

நகராட்சி ஆணையாளர் பேசுகையில், ''நகராட்சி பகுதியில் சாலையில் மத்தியில் சென்ற குடிநீர் குழாய்கள் சாலையோரம் மாற்றி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் ஆங்காங்கே அவ்வபோது ஏற்படும் குடிநீர் குழாய் உடைப்பு காரணத்தினால் குடிநீர் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டு இருக்கலாம். உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மூடி கிடக்கும் பூங்காக்களை தன்னர்வலர்கள் மூலம் பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

39 வார்டு உறுப்பினர்களும் தங்கள் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் குறித்த பட்டியலை வழங்கினால் அதன் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வரி பணத்தை வசூல் செய்வதில் திருவண்ணாமலை நகராட்சி பின்தங்கி உள்ளது. எனவே நகராட்சியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள வரி பணத்தை வசூல் செய்வதற்கு கவுன்சிலர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்'' என்றார்.

கவுன்சிலர்கள் வெளிநடப்பு

கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கும் போது அ.தி.மு.க. வார்டு கவுன்சிலர்கள் பழனி, சீனிவாசன், சந்திரபிரகாஷ், அல்லிகுணசேகரன், சாந்திசரவணன் ஆகிய 5 பேரும் திடீரென வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் அவர்கள் கூறுகையில், நகர மன்ற கூட்டத்தில் கடந்த 10 மாதங்களாக நாங்கள் வைத்து வரும் கோரிக்கைகளுக்கு எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ள வில்லை. எங்கள் பகுதிகளில் சாலை, கால்வாய் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படவில்லை. பொதுப்பணித்துறை அமைச்சர், நகராட்சியில் உள்ள 39 வார்டுகளிலும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உத்தரவிட்டும் அதிகாரிகள் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் உள்ளனர்.

இதனை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தனர். இதனால் நகர மன்ற கூட்டத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

பொங்கல் விழா

முன்னதாக நகராட்சி அலுவலக வளாகத்தில் நகர மன்ற தலைவர் தலைமையில் ஆணையாளர், கவுன்சிலர் கலந்து கொண்ட சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

இதில் பொங்கல் வைக்கப்பட்டு நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், கவுன்சிலர்கள், பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.

==========


Next Story