தென்காசியில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்; முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்பு
மதுரை மாநாடு தொடர்பாக தென்காசியில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
மதுரை மாநாடு தொடர்பாக தென்காசியில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
ஆலோசனை கூட்டம்
மதுரையில் அ.தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை தென்காசி இசக்கி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தென்காசி மாவட்ட அனைத்து கிளைக் கழக செயலாளர்கள், வார்டு கழக செயலாளர்கள் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி, முன்னாள் எம்.பி. கே.ஆர்.பி.பிரபாகரன், மாவட்ட அவைத் தலைவர் சண்முகசுந்தரம், துணை செயலாளர்கள் வீரபாண்டியன், பொய்கை மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் வரவேற்றார். வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தொகுப்புரை வழங்கினார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கட்சியின் அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோரும் பேசினர்.
கே.பி.முனுசாமி பேச்சு
கூட்டத்தில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி பேசியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி நல்லாட்சி நடத்தினார். அதற்கு முன்னதாக அவர் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து எதிரிகளை சமாளித்து மக்களிடம் செல்வாக்கு பெற்றார். ஒரு சிலர் இதில் காழ்ப்புணர்ச்சி கொண்டு அவருக்கு எதிராக செயல்பட்டனர்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்து அதன் மூலம் முதல்-அமைச்சராக வந்துள்ளார். ஆனால் சாதாரண ஒரு விவசாயியாக இருந்து கிளைச் செயலாளராகி படிப்படியாக முன்னேறி எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக வந்தார். அவருக்கு ஜெயலலிதா ஆட்சி நடத்தும் போது 6 வருடங்கள் அமைச்சராக இருந்து அனுபவம் பெற்றவர். அரசு நிர்வாகத்தை தானாகவே கற்றுக் கொண்டவர்.
மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார்
பல்வேறு போராட்டங்களை சந்தித்து கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார். அ.தி.மு.க. நிர்வாகம் ஒழுக்கமானது. ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றினார். இப்போது ஒரு கோடியே 87 லட்சம் உறுப்பினர்கள் அ.தி.மு.க.வில் உள்ளனர்.
மதுரை மாநாட்டில் 2 கோடி உறுப்பினர்கள் உள்ளனர் என்ற அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார். இந்த மாநாட்டிற்கு திரளாக வரவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கலந்துகொண்டவர்கள்
கூட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் காத்தவராயன், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நெல்லை முகிலன், இளைஞர்கள் மற்றும் இளம்பெண் பாசறை செயலாளர் சிவ சீதாராமன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குற்றாலம் என்.சேகர், பேரூராட்சி மன்ற தலைவர் கணேஷ் தாமோதரன், தென்காசி நகர செயலாளர் சுடலை உள்பட பலர் கலந்து கொண்டனர்.