அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை - 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்


அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை - 6 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்
x

செங்குன்றம் அருகே நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்த அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை

செங்குன்றம்,

சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மொண்டியம்மன் நகர் திலகர் தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன்(வயது 53). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், பாடியநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராவார். தற்போது திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அம்மா பேரவை இணை செயலாளராகவும் இருந்து வந்தார்.

பார்த்திபன், தினமும் காலையில் பாடியநல்லூரில் உள்ள அங்காள ஈஸ்வரி அம்மன் கோவில் திடலில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். நேற்று காலையும் அவர் வழக்கம் போல் அங்கு நடைபயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பார்த்திபனை சுற்றி வளைத்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்திபன், அந்த கும்பலிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடினார்.

ஆனாலும் அந்த கும்பல் விடாமல் ஓட ஓட விரட்டி பார்த்திபனின் கால், தலை, கழுத்து, முதுகு ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டியது. இதில் படுகாயம் அடைந்த பார்த்திபன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் தாங்கள் வந்த மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பிச்சென்றது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் செங்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலையான பார்த்திபன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இணை கமிஷனர் விஜயகுமார், செங்குன்றம் மாவட்ட துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பார்த்திபன் கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் தனிப்படைகள் அமைத்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து 6 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

பார்த்திபன் அந்த பகுதியில் பிரபலமானவராக இருந்தார். தற்போது பாடியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக அவருடைய அண்ணன் நடராஜனின் மனைவி ஜெயலட்சுமி இருந்து வருகிறார்.

பார்த்திபன் கொலையான சம்பவம் பகுதியில் காட்டு தீப்போல பரவியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. முன்னெச்சரிக்கையாக பாடியநல்லூரில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன. கடைகளும் அடைக்கப்பட்டது. அசம்பாவிதங்களை தடுக்க பாடியநல்லூர் திருவள்ளூர் கூட்டு சாலை, பார்த்திபன் வீடு ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

பார்த்திபன் மீது ஆந்திர மாநிலம் கடப்பா போலீஸ் நிலையத்தில் செம்மரம் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ெகாலையான பார்த்திபனுக்கு ராஜேஸ்வரி என்ற மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் டாக்டருக்கும், மற்றொருவர் வக்கீலுக்கும் படித்து வருகின்றனர்.


Next Story