அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொலைமிரட்டல்: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மீது வழக்கு
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழக சட்டசபையில் கடந்த 23-ந்தேதி 'ஆன்லைன்' சூதாட்ட தடை மசோதா தொடர்பாக விவாதம் நடைபெற்றது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க. சார்பில் நன்றி என்று கூறினார். அவரது பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியனுக்கும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அரக்கோணம் ரவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் சட்டசபை கூட்டம் முடிந்து அன்றைய தினம் சேப்பாக்கம் எம்.எல்.ஏ. விடுதியில் தங்கி இருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அரக்கோணம் ரவிக்கு தொடர்ச்சியாக செல்போனில் ஆபாசமாக திட்டியும், கொலைமிரட்டல் விடுத்தும் அழைப்பு வந்துள்ளது.
இதுகுறித்து அவர், திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் தனது செல்போனுக்கு வந்த மிரட்டல் அழைப்பு எண்களுடன் புகார் அளித்தார். அதன்பேரில் 'சைபர் கிரைம்' போலீசார் நடத்திய விசாரணையில் மிரட்டல் அழைப்பு விடுத்தது அயனாவரம் பகுதியை சேர்ந்த விவேக், ஜெயக்குமார் என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது.