நகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
வார்டு பிரச்சினைகளை பேச விடாமல் தடுப்பதாக கூறி ஊட்டி நகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி
வார்டு பிரச்சினைகளை பேச விடாமல் தடுப்பதாக கூறி ஊட்டி நகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நகராட்சி கூட்டம்
ஊட்டியில் நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு தலைவர் வாணீஸ்வரி தலைமை தாங்கினார். ஆணையாளர் ஏகராஜ் முன்னிலை வகித்தார்.
கூட்டம் தொடங்கியதும் தி.மு.க. கவுன்சிலர் ஜார்ஜ் பேசும்போது, ஊட்டி நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து விட்டது. இதை கட்டுப்படுத்த வேண்டும். அனைத்து வார்டுகளுக்கும் குப்பை வண்டிகள் முறையாக செல்வது இல்லை. எனவே குப்பை தொட்டிகள் வைக்க வேண்டும். கேசினோ பகுதியில் பார்க்கிங் தளத்தில் கட்டணம் வசூலிக்கும் இளைஞர்கள் வாகன ஓட்டுனர்களை தரைக்குறைவாக பேசுகின்றனர். எனவே அங்கு கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
வாக்குவாதம்
பின்னர் தி.மு.க. கவுன்சிலர் முஸ்தபா, நகராட்சியில் அனுமதி இன்றி கட்டப்படும் கட்டிடங்கள் குறித்து பேசினார். அப்போது குறுக்கிட்ட அ.தி.மு.க. கவுன்சிலர்கள், வார்டு பிரச்சினைகளை பேசாமல் மற்ற பிரச்சினைகளை தி.மு.க. கவுன்சிலர்கள் பேசுகின்றனர். அ.தி.மு.க. கவுன்சிலர்களை பேச விடாமல் தடுக்கின்றனர் என்று குற்றம் சாட்டினர். மேலும் தலைவர், ஆணையாளரை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நகராட்சியில் துணைத்தலைவர் ஆதிக்கம் காணப்படுகிறது. எங்களது வார்டுகளில் உள்ள பிரச்சினைகளை தீர்க்காமல் ஒரு ஆண்டுக்கும் மேலாக இழுத்தடித்து வருகின்றனர். இது தொடர்பாக மாவட்ட செயலாளர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்றனர்.
குற்றச்சாட்டு
இதையடுத்து துணைத்தலைவர் ரவிக்குமார் பேசுகையில், நகராட்சியில் தி.மு.க., காங்கிரஸ் கவுன்சிலர்களின் வார்டுகளை காட்டிலும் அ.தி.மு.க. கவுன்சிலர்களின் வார்டுகளில்தான் அதிக வளர்ச்சி பணிகள் நடக்கிறது. எனினும், பணிகள் நடக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அ.தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் பிரதான குடிநீர் குழாயில் இருந்து காட்டேஜ்களுக்கு இணைப்பு வழங்குவதாக கூறி ரூ.3½ லட்சம் வாங்கியுள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றொரு அ.தி.மு.க. கவுன்சிலர், கமர்சியல் சாலையில் 6 கடைகளில் விதிமுறைகளை மீறி கட்டுமான பணிகளை மேற்கொள்ள பணம் வாங்கியுள்ளார் என்று குற்றம் சாட்டினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.