ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க.- பா.ம.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டத்தில் அனைத்து வார்டுகளுக்கும் பொது நிதியை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயங்கொண்டம் நகராட்சி கூட்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியின் அவசர கூட்டம் நகராட்சி மன்ற தலைவர் சுமதி சிவக்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு துணைத் தலைவர் கருணாநிதி, நகராட்சி ஆணையர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகராட்சி மேலாளர் அன்புச்செல்வி வரவேற்றார். மன்றம் பொருள் தீர்மானத்தை இளநிலை உதவியாளர் சாவித்திரி வாசித்தார்.
கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தனர். கூட்டம் தொடங்கி 5-வதாக தீர்மானம் வாசிக்கும் போது நகராட்சி பொது நிதி ரூ.65 லட்சம் மற்றும் கலைஞர் மேம்பாட்டு பணிக்கு ஒதுக்கீடு செய்த ரூ.34 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடி மதிப்பிலான சாலை பணிகளுக்கு மன்ற அனுமதி இல்லாமல் டெண்டர் விடப்பட்டு தற்போது அனுமதி கேட்பதாக கூறி அ.தி.மு.க.வை சேர்ந்த 4 கவுன்சிலர்களும், பா.ம.க.வை சேர்ந்த 3 கவுன்சிலர்களும் தங்கள் இருக்கையில் இருந்து திடீரென எழுந்து தரையில் அமர்ந்து நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
உள்ளிருப்பு போராட்டம்
ஜெயங்கொண்டம் நகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளுக்கும் நிதி ஒதுக்காமல் தி.மு.க. கவுன்சிலர்கள் வார்டுகளுக்கு மட்டும் நிதி ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பாரபட்சமின்றி அனைத்து வார்டுகளுக்கும் பொது நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர். நகராட்சி அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக சாலை பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அவசர அவசரமாக கூட்டத்தை முடித்து விட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இருப்பினும் அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. கவுன்சிலர்கள் 7 பேரும் மாலை 6 மணி வரை உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. கவுன்சிலர்களிடம் நகராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.