அரசு மாதிரி பள்ளியில் மாணவர் சேர்க்கை
ராமநாதபுரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கையை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கையை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்தார்.
அரசு மாதிரி பள்ளி
ராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறையின் சார்பில் அரசு மாதிரி பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை நிகழ்ச்சி ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கல்விதான் ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக உள்ளது. அதனை உரிய பருவத்தில் முழுமையாக பெறும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப கல்வி முறை மாறி வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் தங்கும் வசதியுடன் அரசு மாதிரி பள்ளி தொடங்கப்பட்டு அதில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு அனைத்து வசதிகளும் வழங்கப்படுகின்றன.
154 பேர் தேர்வு
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அரசு மாதிரி பள்ளி தொடங்கப்பட்டு 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு மாணவ, மாணவிகள் சேர்க்கை நடத்தப்பட்டு சுமார் 200 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நடப்பாண்டில் கூடுதலாக 9 மற்றும் 10-ம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு உள்ளது. கடந்தாண்டு 12-ம் வகுப்பு மாணவ, மாணவிகள் சிறந்த முறையில் பயின்று அரசு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவம், பொறியியல், சட்டப்படிப்பு, வேளாண்மை படிப்பு போன்றவற்றில் அரசு கல்லூரிகளில் படிக்கும் வகையில் முதல் நிலையில் மார்க் எடுத்துள்ளனர். அவர்களை பாராட்டுவதுடன், இந்த ஆண்டு 12-ம் வகுப்பு மாணவர்கள் இன்னும் சிறப்பாக மதிப்பெண் பெற்று அதிகளவு முதல்நிலை படிப்புகளுக்கு செல்ல வேண்டும். அந்த வகையில் நடப்பாண்டிற்கு 11-ம் வகுப்பில் சேர்வதற்கு 154 பேர் தேர்வாகி உள்ளனர்.
இவ்வாறு பேசினார்.
நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாதிரி பள்ளி மண்டல ஒருங்கிணைப்பாளர் ஜெயஸ்ரீ, உயர் கல்வி ஆலோசகர் தவராம் குமார், உதவி தலைமை ஆசிரியர் பழனிவேல் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.