சிறப்பு விளையாட்டு விடுதியில் மாணவர்கள் சேர்க்கை
சிறப்பு விளையாட்டு விடுதியில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வருகிற 2-ந் தேதி கடைசி நாளாகும்.
கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகள் விளையாட்டுத்துறையில் சாதனை படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய சிறப்பு விளையாட்டு விடுதிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. அதன்படி தடகளம், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கையுந்து பந்து, பளுதூக்குதல், வாள்வீச்சு போட்டி மாணவர்களுக்கு சென்னை, நேரு விளையாட்டு அரங்கத்தில் சிறப்பு விளையாட்டு விடுதியும், ஆக்கி மாணவர்களுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியிலும் உள்ளது.
இதேபோல் தடகளம், குத்துச்சண்டை, கையுந்து பந்து, கால்பந்து, பளுதூக்குதல், ஜூடோ மாணவிகளுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்திலும், கூடைப்பந்து, கைப்பந்து, ஆக்கி, கபடி மாணவிகளுக்கான சிறப்பு விளையாட்டு விடுதி வேலூர் காட்பாடியிலும் அமைந்துள்ளது.
12-ம் வகுப்பு தேர்ச்சி
இந்த விடுதிகளில் மாணவ-மாணவிகள் சேர்வதற்கு 1-1-2023 அன்றைய தேதியின்படி 17 வயது நிரம்பிய 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, கல்லூரியில் இளநிலை மற்றும் முதுகலை பயிலும் மாணவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர். தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில அளவில் குடியரசு, பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்தும் ஏதேனும் ஒரு போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.
இல்லையெனில் தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில், தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் விண்ணப்பம்
விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ-மாணவிகள் சிறப்பு விளையாட்டு விடுதி சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தினை www.sdat.tn.gov.inஎன்ற இணையதள முகவரி மூலம் மட்டுமே வருகிற 2.5.2023 அன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 95140 00777 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர விரும்பும் மாணவ-மாணவிகளுக்கு மாநில அளவிலான தேர்வுப் போட்டிகள் 3-ந் தேதி காலை 7 மணியளவில் சென்னை பெரியமேடு ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கம், சென்னை பெரியமேடு ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், சென்னை எழும்பூர் எம்.ஆர்.கே. ஸ்டேடியம் ஆகிய இடங்களில் நடக்கிறது. எனவே கடலூர் மாவட்டத்தை சேர்ந்த திறமையான விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மேற்படி சிறப்பு விளையாட்டு விடுதியில் சேர்ந்து பயன்பெறலாம்.
மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.