விளையாட்டு மையங்களில் பள்ளி மாணவ-மாணவிகள் சேர்க்கை - கலெக்டர் தகவல்


விளையாட்டு மையங்களில் பள்ளி மாணவ-மாணவிகள் சேர்க்கை - கலெக்டர் தகவல்
x

விளையாட்டுத் துறையில் பள்ளி மாணவ- மாணவிகள் சிறந்து விழங்க விளையாட்டு மையங்கள், விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டுத் துறையில் சாதனைகள் புரிவதற்கு ஏற்ப விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

அதன்படி 7-ம் வகுப்பு, 8-ம் வகுப்பு, 9-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு மாணவ- மாணவிகள் விளையாட்டு விடுதிகளில் தங்கி பயிற்சி பெறவும், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற 6, 7, 8 ஆகிய வகுப்பு மாணவ-மாணவிகளின் சேர்க்கை நடைபெற உள்ளது.

இதற்கு மாவட்ட அளவிலான தேர்வுப் போட்டிகள் வருகிற 24-ந் தேதி காலை 7 மணியளவில் மாவட்ட ஒருங்கிணைந்த விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. மாணவர்களுக்கான தேர்வுப் போட்டிகள் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, கபடி, மேசைப்பந்து, டென்னிஸ், ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை, பளுதூக்குதல் ஆகியவை ஆகும்.

அதேபோல் மாணவிகளுக்கான தேர்வுப் போட்டிகள் தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துபந்து, கபடி, டென்னிஸ், ஜூடோ, ஜிம்னாஸ்டிக், ஸ்குவாஷ், வில்வித்தை, பளுதூக்குதல், மேசைப்பந்து ஆகிய போட்டிகள் நடைபெறும். மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள் விளையாட்டு விடுதி, முதன்மை நிலை விளையாட்டு மையங்களின் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தினை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை வருகிற 23-ந் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும் தகவல்களுக்கு திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அலுவலக தொலைப்பேசி எண் 044-27666249-ல் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story