ஆதித்யா எல்1 விண்கலம்: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைவர்கள் வாழ்த்து
ஆதித்யா எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,
நிலவை தொடர்ந்து சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர். தற்போது ஆதித்யா எல்-1 விண்கலம், புவி சுற்று வட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.
விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ள வாழ்த்துச் செய்தியில்,
"சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக புவி வட்ட பாதையில் செலுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி அறிந்து எனது மகிழ்ச்சியை இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் பகிர்ந்து கொள்கிறேன். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த திட்ட இயக்குநர் திருமதி. நிஹர்ஷாஜி அவர்களுக்கும், அவரது குழுவினருக்கும் எனது சார்பாகவும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்."
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
"சூரியனை ஆய்வு செய்வதற்காக, ஸ்ரீஹரிஹோட்டாவிலிருந்து பி.எஸ்.எல்.வி ஏவுகலன் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து புவிவட்டப்பாதையில் சுற்றிவரத் தொடங்கியுள்ளது. இன்னும் 125 நாட்களில் எல் 1 புள்ளியை அடைந்து சூரியனை ஆய்வு செய்யத் தொடங்கும். நிலவைத் தொடர்ந்து சூரியனையும் வெற்றிகரமாக ஆய்வு செய்யும் இஸ்ரோ அமைப்புக்கும், அதன் விஞ்ஞானிகளுக்கும் வாழ்த்துகளும், பாராட்டுகளும். சூரியன் குறித்த உண்மைகளையும் உலகிற்கு சொல்லும் பயணம் வெற்றி பெற வாழ்த்துகள்!"
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்,
"சூரியனின் வெளிப்புற பகுதியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா - எல்1 எனும் அதிநவீன விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்த பணியாற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
சந்திரயான் -3 திட்டத்தின் வெற்றியை உலக நாடுகள் அனைத்தும் உற்று நோக்கி கொண்டிருக்கும் அதே வேளையில் ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்திருப்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சிக்கு மேலும் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது.
சந்திரயான் திட்டங்களை போலவே ஆதித்யா எல்1 திட்டத்தின் இயக்குனராகவும் தென்காசியைச் சேர்ந்த விஞ்ஞானி நிகர் ஷாஜி பணியாற்றியிருப்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமையை தேடித் தந்துள்ளது.
விண்வெளிப் பயணத்தில் புதிய உச்சங்களை தொட்டு இளம் தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் மேலும் பல சாதனைகளை படைக்க அனைத்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.