மதம் மாறியிருந்தால் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் சாதி சான்றிதழ் செல்லாது - தேசிய ஆதிதிராவிடர் கமிஷன் துணைத்தலைவர்
ஆதிதிராவிடர்கள் மதம் மாறிய பிறகு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் இருந்தால் அது செல்லாது என்று தேசிய ஆதிதிராவிடர் கமிஷன் துணைத்தலைவர் அருண் ஹல்தார் கூறினார்.
இதுகுறித்து, தேசிய ஆதிதிராவிடர் கமிஷன் துணைத்தலைவர் அருண் ஹல்தார் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் 200 புகார்கள்
தேசிய ஆதிதிராவிடர் கமிஷனுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து 200 புகார்கள் வந்துள்ளன. இதில், 100 வழக்குகள் மீது விசாரணை நடந்து வருகிறது. இவற்றில் 60 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மக்களின் மீது நிகழும் வன்முறைகளில் ராஜஸ்தான் மாநிலம் முதல் இடத்திலும், தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில் ஆதிதிராவிடர் மக்கள் சுடுகாடு செல்வதற்கு தனிபாதை உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இதுதொடர்பாக சமீபத்தில் வந்த புகாரையடுத்து சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்யப்பட்டது. அனைவருக்கும் ஒரே பாதை அமைக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது. இதுகுறித்த விழிப்புணர்வை மக்களுக்கு அரசு ஏற்படுத்த வேண்டும்.
சான்றிதழ் செல்லாது
ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் மதம் மாறும்போது, தானாக ஆதிதிராவிடர் வகுப்பில் இருந்து வெளியேறுகின்றனர். மதம் மாறிய பின்னும், அவர்களுக்கு ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர் என்று சாதி சான்றிதழ் இருந்தால் அது செல்லாது. மதம் மாறியவர்களுக்கு ஆதிதிராவிடர் வகுப்பு சான்றிதழ் வழங்கப்பட்டால் அது போலி சான்றிதழ்.
இதுகுறித்தும் பல புகார்கள் ஆணையத்திற்கு தொடர்ந்து வருகிறது. போலி சான்றிதழ் வழங்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சரிபார்த்து வழங்க மாவட்ட அளவில் குழு அமைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.